தந்தையாகிய கடவுள்: English
ஒரே கடவுளை நம்புகிறோம்; வானமும் பூமியும், காண்பவை, காணாதவை அனைத்தும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
'தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்.' (தொடக்க நூல் 1:1)
"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்." (எபிரேயர் 1:1-2)
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:16)
"நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்." (எபேசியர் 1:3-4,9-10)
மகனாகிய கடவுள்:
தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக தோன்றிய ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து தோன்றினார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக தோன்றினார். இவர் தோன்றியவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே அனைத்தும் படைக்கப்பட்டன.
"வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை." (யோவான் 1:2-3)
"விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தும் அவர் வழியாய் அவருக் காகப் படைக்கப்பட்டன." (கொலோசையர் 1:16)
மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
"காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்." (கலாத்தியர் 4:4-5)
நமக்காக இவர் போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலின்படியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்; அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட மகிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது அரசுக்கு முடிவு இராது.
"கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து இயேசு, கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்." (பிலிப்பியர் 2:6-11)
தூய ஆவியாகிய கடவுள்:
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியையும் நம்புகிறோம். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். இறை வாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே.
'பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.' (திருத்தூதர் பணிகள் 2:1-4)
ஒரே கத்தோலிக்க திருச்சபை:
ஒரே புனித கத்தோலிக்க [உலகளாவிய] அப்போஸ்தலிக்க [திருத்தூதர்கள் வழிவந்த] திருச்சபையை விசுவசிக்கிறோம்.
'இயேசு சீமோன் பேதுருவிடம், "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.' (மத்தேயு 16:17-19)
'இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: "தந்தையே, நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார் கள். அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்." (யோவான் 16:6,20-21)
" சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்தக் கருத்துடைய வர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்." (1 கொரிந்தியர் 1:10)
பாவ மன்னிப்பு:
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கையும் [ஞானஸ்நானம்] ஏற்றுக் கொள்கிறோம்.
'இயேசு சீடர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி யைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்" என்றார். (மாற்கு 16:15-16)
'இயேசு திருத்தூதர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். (யோவான் 20:22-23)
நிலை வாழ்வு:
இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர் பார்க்கிறோம்.
"அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான் வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடி வரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப் பார்." (மாற்கு 13:24-27)
"கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்." (1 தெசலோனிக்கர் 4:16-17)
-ஆமென் .