Wednesday, October 26, 2011

அக்டோபர் 26, 2011

அசிசி செப தயாரிப்பு நாளில் திருத்தந்தையின் உரை

   இவ்வியாழனன்று அசிசியில் இடம்பெற உள்ள உலக மதப்பிரதிநிதிகளின் கூட்டத்திற்கான தயா ரிப்பாக இப்புதனன்று உரோம் நகரின் பாப்பிறை 6ம் பவுல் மண்டபத்தில் வார்த்தை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பல்சமய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இந்த வார்த்தை வழிபாட்டில் எண்ணற்ற விசுவாசி களும் கலந்து கொண்டனர். பாப்பிறை 6ம் பவுல் மண்டபத்தில் அவர் நடத்திய வார்த்தை வழிபாட் டின்போது வழங்கிய மறையுரையின் சுருக்கம் பின்வருமாறு:
   'உண்மையின் திருப்பயணி, அமைதியின் திருப்பயணி' என்ற தலைப்பில் இவ்வியாழன்று அசிசியில் இடம்பெற உள்ள, உலக அமைதிக்கும் நீதிக்குமான செபம், மற்றும் கலந்துரையாடல் மற்றும் தியானம் ஆகியவை இடம்பெறும் நாளுக்கு முந்தைய நாளான இன்று, வார்த்தை வழிபாட்டை மேற்கொள்கின்றோம். கிறிஸ்தவர்களாகிய நாம் அமைதிக்கென வழங்க வல்ல உயரிய பங்களிப்பு செபம் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். 
   இன்று இங்கு வாசிக்கப்பட்ட இறைவாக்கினர் செக்கரியா நூலின் பகுதி, நம்பிக்கையும் ஒளியும் நிறைந்த அறிவிப்பை நமக்குத் தருகிறது. கடவுள் நமக்கு மீட்பைத் தருகிறார், அதேவேளை அந்த மீட்பைப் பெறும் நாம் அது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும் என நம்மை அழைக்கிறார். நீதிமானாய் வெற்றி வாகை சூடி வரும் ஓர் அரசர் குறித்தும் இங்கு குறிப்பிடுகிறார் செக்கரியா. ஒரு நிமிடம் பெத்லகேம் சென்று, விண்ணகத்தூதர் பேரணியாக வானதூதர்கள் இடையர்கள் முன் பாடிய வரிகளை கொஞ்சம் நோக்குவோம்.
'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' 
   அன்று பிறந்த குழந்தை இயேசு, உலகம் அனைத்திற்கும் அமைதியை ஆடை யாய் அணிந்து வந்தார். இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களைப் பார்த்தோமென்றால், அவர் ஓர் எளிமையான, தாழ்ச்சியுடைய அரசராக கழுதை யின்மீது ஏறி யெருசலேமிற்குள் நுழைவதைக் காண்கிறோம். இவர் ஓர் ஏழை மன்னர். ஆம். இறைவனின் ஏழைமக்களின் மன்னர். தங்களின் பேராசை, சுயநலம் போன்றவைகளை வென்று, உள்மன விடுதலைப் பெற்று, இறைவனையே தங்கள் உடைமையாகக் கருதும் மக்களின் மன்னர் அவர். அமைதி நிறைந்த புதிய அரசின் மன்னர் இயேசு கிறிஸ்து. அமைதியும் தாழ்ச்சியும் உள்ள அவர் உலகின் ஓர் எல்லை முதல் மறு எல்லை வரை ஆள்கிறார். 
   அவர் இந்த உலகை ஆயுதங்கள் மூலம் வெற்றி கொள்ளவில்லை, மாறாக சிலுவையின் வல்லமை மூலம் வெற்றிகண்டார். தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் தூய பவுலின் சிலை வாளை ஏந்தி நிற்பதை நாம் காண்கிறோம். அது வன்முறை மற்றும் போரின் அடையாளமல்ல. மாறாக, தன் வாழ்வையே கையளித்த துன்பத்தின் வாளாக அது நிற்கின்றது. அமைதி எனும் கொடைக்காக இறைவனை வேண்டி, நம்மை அமைதியின் கருவியாக மாற்றும்படிக் கேட்போம். இவ்வாறு தன் உரையை வழங்கிய திருத்தந்தை, அசிசியில் இடம்பெற உள்ள பல்சமயப் பிரதிநிதிகளின் கூட்டம் வெற்றிபெற அனைவரின் செபத்திற்கும் வேண்டுகோள் விடுத்து, அதனை நிறைவுசெய்தார்.
   தூய பேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெறுவதாக இருந்த இந்த வார்த்தை வழிபாட்டு நிகழ்ச்சி, மழை காரணமாக பாப்பிறை 6ம் பவுல் அரங்கிற்கு மாற்றப் பட்டதால், இடப்பற்றாக்குறை காரணமாக எண்ணற்றோர் அதில் பங்குபெறமுடியா மல் போனது. இருப்பினும் அவர்களைத் தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் சந்தித்த பாப்பிறை, அவர்களுக்குப் பல்வேறு மொழிகளில் வாழ்த்துக் களை வழங்கி தன் ஆசீரையும் அளித்தார்.