Saturday, November 19, 2011

நவம்பர் 19, 2011

உங்கள் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றி விடாதீர்கள் - உலகத் தலைவர்களுக்குத் திருத்தந்தை அழைப்பு

   "ஒப்புரவு, நீதி, அமைதி" என்ற தலைப்பில் இடம் பெற்று வரும் திருத்தந்தையின் பெனின் நாட்டுத் திருப்பயணத்தின் இரண்டாவது நாளான இச்சனிக் காலை கொட்டுன்னு திருப்பீடத் தூதரகத்தில் தனியாகத் திருப்பலி நிகழ்த்தினார். பின்னர் காலை 8.45 மணிக்கு கொட்டுன்னு அரசுத் தலைவர் மாளிகை சென்றார். அங்கு பெனின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார். பின்னர் திருத்தந்தை ஆற்றிய உரை பின்வருமாறு:
    ஆப்ரிக்கா, நம்பிக்கையின் கண்டம். இது எனது சொந்த மற்றும் திருச்சபையின் எண்ணமாகும். நம்பிக்கையின் அர்த்தம் கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் வேறுபடுகின்றது. நமது மனதானது அடிக்கடி முற்சார்பு எண்ணங்கள் அல்லது தவறான பிம்பங்களால் தடைசெய்யப்படுகின்றது. இது ஆப்ரிக்காவின் உண்மைத்தன்மைகள் பற்றி எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குகின்றது. இது நடக்காது, முடியாது என்று சொல்லும் சோதனைகளுக்கும் ஆளாக்குகின்றது. செயலாக்கம் மிகுந்த வழிகளைச் சொல்வதற்குப் பதில், கண்டனக் குரலில் தீர்ப்புகள் வழங்குவது யாருக்கும் எளிது. ஆனால் இதனால் தீர்வுகள் கிடைக்காது. எனவே இதே மாதிரியான தீர்ப்புத் தொனியுடன் வளர்ந்த நாடுகள் ஆப்ரிக்காவைத் தொடர்ந்து நோக்கக் கூடாது.
   மனிதரின் குருட்டுத்தனத்தால், அதிகார ஆசையால், அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்கள் மீதான ஆசைகளால் பல மோதல்கள் தொடங்கின. இவை மனித மாண்பையும் இயற்கையையும் கேலி செய்வதாக இருந்தன. அண்மை மாதங்களில் பலர் சுதந்திரத்திற்கான, பொருளாதாரப் பாதுகாப்புக்கான, நல்லிணக்கத்தில் வாழ்வதற்கானத் தங்களது ஆவலை வெளிப்படுத்தியுள்ளனர். இக்கண்டத்தில் புதிய நாடு ஒன்று உருவாகியுள்ளது. மக்கள் மாண்புடன் வாழவும், ஒளிவு மறைவில்லாத அரசு நிர்வாகம் உருவாகவும், மொத்தத்தில் அமைதியிலும் நீதியிலும் வாழவும் விரும்புகின்றனர். அதேநேரம், துர்மாதிரிகைகளும், அநீதி களும் ஊழல்களும் பேராசைகளும் தவறுகளும் பொய்களும் இறப்பைக் கொணரும் வன்முறைகளும் பெருகிக் காணப்படுகின்றன. இந்தத் தீமைகள் ஆப்ரிக்கக் கண்டத்தை நிச்சயமாகப் பாதித்து
ள்ளன. உலகின் பிற பகுதிகளையும் பாதித்துள் ளன. மக்கள் ஒவ்வொருவரும் நல்ல நிர்வாகத்தில் பங்கெடுக்க விரும்புகின்றனர். எந்த ஓர் அரசியல் ஆட்சியும் நேர்மையாக இல்லை. எந்த ஒரு பொருளாதாரமும் சமத்துவம் காக்கவில்லை என்பதை அறிவோம். ஆயினும் இவை எப்போதும் பொது நலனுக்குச் சேவை செய்ய வேண்டியவை. மனிதர் தங்களது மாண்பு மதிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட விரும்புகின்றனர். எனவே ஆப்ரிக்க நாடுகளின் மற்றும் உலகின் பிற பகுதிகளின் அனைத்து அரசியல் பொருளாதாரத் தலைவர்களுக்கு இந்த இடத்திலிருந்து ஓர் வேண்டுகோளை முன்வைக்கிறேன். உங்கள் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றி விடாதீர்கள். அவர்களது நிகழ்காலத்தை அவர்களின் எதிர்காலத்திலிருந்து துண்டித்து விடாதீர்கள். உங்களது பொறுப்புகளை அறநெறிக் கூறுகளுடன் தைரியமாக அணுகுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தால் இதற்கான ஞானத்தை அருளுமாறு கடவுளிடம் கேளுங்கள். உங்கள் மக்களின் எதிர்காலத்தைச் சமைக்க வேண்டியவர்கள் என்ற வகையில், நம்பிக்கையின் உண்மையான பணியாளர்களாக மாற இந்த ஞானம் உதவும். பணியாளராக வாழ்வதென்பது எளிதான காரியமல்ல.
   உலகத் தலைவர்களுக்கு திருத்தந்தை விடுத்த இந்த அழைப்பைக் குறிப்பிடாத ஊடகங்களே இல்லை. இந்த அழைப்புடன், பல மதங்கள் மத்தியில் உரையாடல் எவ்வளவு முக்கியம் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடவுளின் பெயரால் அண்மையில் தொடங்கிய கலவரங்களையும் இறப்புக்களையும் மீண்டும் நினைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை எனக் கருதுகிறேன். ஒருவருக்குத் தனது மதத்தைப் பற்றிய அறிவும் ஆழமானப் புரிதலும், அம்மதத்தை நடைமுறைப்படுத்துவதும் உண்மையான பல்சமய உரையாடலுக்கு இன்றியமையாதவை. உரையாடல் நடத்த விரும்பும் ஒருவர், உண்மையாகவே செபம் செய்வதால் மட்டுமே இதனைத் தொடங்க முடியும். எனவே ஒவ்வொருவரும் கடவுள் மற்றும் மற்றவர் முன்பாக உண்மையாகவே தன்னை நிறுத்த வேண்டும்.
   இவ்வாறெல்லாம் உரையாற்றிய திருத்தந்தை, அங்கு அமர்ந்திருந்த பல சமயத் தலைவர்களை வாழ்த்தினார். கத்தோலிக்கத் திருச்சபை நடத்தும் உரையாடல் இதயத்திலிருந்து வருவது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று சொன்னார். பின்னர் ஒரு கையின் ஐந்து விரல்களை உருவகமாகச் சொல்லி பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மக்கள் மத்தியில் புரிதலின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், கடவுள் நிகழ்காலத்தில் பிரசன்னமாய் இருப்பது போல வருங்காலத்திலும் நம்பிக்கையாக இருக்கிறார். எனக்கு மிகவும் விருப்பமான வர்களாக இருக்கும் ஆப்ரிக்கர்களாகிய நீங்களும் உங்களது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் கடவுளில் வைக்க வேண்டுமென்பது எனது ஆவல். ஆப்ரிக்காவே, நம்பிக்கை கொள், எழுந்திரு. நம் ஆண்டவர் அழைக்கிறார். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!