Wednesday, November 30, 2011

நவம்பர் 30, 2011

நம் பாவ மீட்புக்கான இயேசுவின் கீழ்படிதல் அவரை மரணம் வரை இட்டுச் சென்றது - திருத்தந்தை

    இப்புதனன்று உரோம் நகரின் தட்ப வெப்ப நிலை சிறப்பானதாக இருந்தபோதிலும், ஏற்கனவே திட்ட மிட்டபடி, திருத்தந்தையின் பொது மறைபோதகம் திருத்தந்தை 6ம் பால் மண்டபத்திலேயே இடம் பெற்றது. கிறிஸ்தவ செபத்தின் மறையுண்மை குறித்து தன் எடுத்துக்காட்டு மூலம் முழுமையாக வெளிப்படுத்தும் இயேசு கிறிஸ்துவை நோக்கி திரும்புவோம் என இவ்வார புதன் மறைபோதகத் தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   தன் திருமுழழுக்கைத் தொடர்ந்து இயேசு மேற்கொண்ட செபம், ஒரு முக்கிய தருணமாகும். இறைமகன் என்ற அவரின் ஆழமான தனித்தன்மையையும், தான் மீட்க வந்த பாவம் நிறைந்த மனித குலத்துடன் இயேசு கொண்ட ஒருமைப் பாட்டையும் வெளிப்படுத்துவதாக அச்செபம் இருந்தது.
    இயேசுவின் செபம், தந்தையின் விருப்பத்திற்கு, முழுமையான, மகனுக்குரிய கீழ்ப்படிதலை காட்டி நிற்கின்றது. அந்தக் கீழ்ப்படிதலானது அவரை, நம்முடைய பாவ மீட்புக்காக சிலுவை மரணம் வரை இட்டுச்சென்றது. தன் மனித இதயத்தோடு அன்னை மரியிடமிருந்தும், யூத பாரம்பரியங்களிலிருந்தும் செபிக்கக் கற்றுக் கொண்டார் இயேசு. இருப்பினும், அவரின் செபத்திற்கான மூல ஆதாரம், தந்தையுடன் ஆன முடிவற்ற ஒன்றிப்பேயாகும். நாம் வானுலகத் தந்தையின் புதல்வர்களாக எவ்வாறு செபிக்க வேண்டும் என்பதை மனுமகன் இயேசு, நேர்த்தியான முறையில் காண்பிக்கிறார். செபத்தின் மீது பற்றுறுதி பற்றிய இயேசுவின் எடுத்துக்காட்டு, நாம் நம் செபத்திற்கு எடுக்கும் முயற்சி மற்றும் ஒதுக்கும் நேரம் ஆகியவைகளை ஆழமாகச் சிந்திக்க நமக்குச் சவால் விடுக்கின்றது. செபம் என்பது கடவுளின் கொடையாக இருப்பினும், அது தொடர் பயிற்சிகள் மூலம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு கலையாகும். தொடர்ந்து நாம் செபிக்க வேண்டும் என்று கற்பிக்கும் இயேசு,
செபத்தின் வனப்பு வழியாக, நம்மையே முற்றிலுமாக அர்ப்பணித்தல் மற்றும் திறந்த உள்ளத்துடன் இறைவனை நாடுதல் போன்றவைகளுக்கு சாட்சி பகர்பவர்களாக நாம் செயல்படவேண்டும் என வும் எதிர்பார்க்கிறார், என தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை.
   இப்புதன் மறைபோதகத்தில் பங்குபெற்ற ‘சான் எஜிதியோ’ அமைப்பின் அங்கத்தினர்களைத் தனிப்பட்ட முறையில் வாழ்த்திய திருத்தந்தை, மரண தண்டனையை உலகிலிருந்து அகற்ற அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். 'உயிர்களுக்கு மதிப்பில்லா இடத்தில் நீதியில்லை' என்ற தலைப்பில் வாழ்விற்கான மாண்பு குறித்த உலகக் கருத்தரங்கை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. சிறைக்கைதிகளின் மாண்பை மதிப்பதுடன் சமூக ஒழுங்கை காப்பதாகவும் உலகின் குற்றவியல் சட்டங்களில் இடம்பெறும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்தும் சான் எஜிதியோ குழுவிடம் திருப்தியை வெளியிட்டார் அவர். தன் புதன் மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் பாப்பிறை.