Sunday, May 6, 2012

மே 6, 2012

இயேசுவை அன்புசெய்வோர் ஆன்மீக அறுவடைக்காக
மிகுந்த கனிகளை விளைவிக்கின்றனர் - திருத்தந்தை

   இன்று உரோம் தூய பேதுரு பேராலய வளாகத் தில் கூடியிருந்த மக்களுக்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு பாஸ்கா மூவேளை செப உரை வழங்கினார்:
   இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "உண்மை யான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்" என்று கூறுகிறார். நாம் என்றும் இயேசுவோடு இணைந்து அவரையேச் சார்ந்து வாழவேண்டியது அவசியம். ஏனெனில் அவரின்றி நாம் எதையும் செய்யமுடியாது. இறை வனின் உண்மையான திராட்சைக்கொடியாம் இயேசு, தனது அன்பின் தியாகத்தால் நமக்கு மீட்பளித்து, நாம் அந்தக் கொடியுடன் இணைக்கப்படுவதற்கான வழியைக் காட்டியுள்ளார். இயேசு தந்தையின் ன்பில் நிலைத்திருப்பது போன்று, அவரது சீடர்களும் இயேசுவோடு ஆழமாக இணைந்திருக்கும்போது, கனிதரும் கிளைகளாக மாறி, பெருமளவு பலன் தருவர். நாம் திருமுழுக்கு பெற்ற நாளில், திருச்சபை கிறிஸ்து வின் மறைபொருளில், அவரது தனித்தன்மையில் நம்மை கிளைகளாக ஓட்டி இணைத்தது. "நாம் ஒவ்வொருவரும் ஒரு திராட்சைச் செடியைப் போன்ற வர்கள்; அது ஒவ்வொரு நாளும் செபத்திலும், அருட்சாதனங்களில் பங்குகொள்வ திலும், பிறரன்பிலும், ஆண்டவரோடு இணைந்திருப்பதிலும் வளர்கிறது" என்பதை நினைவில்கொள்ள அவர் இறைமக்களை அழைக்கிறார். கடவுளிடம் நாம் வேண்டும் போது, நம் வேண்டுகோளுக்கு செவிமடுக்கும் இறைவன், நம் பணியை ஆற்றுவ தற்கான பலத்தை வழங்குகிறார், அதன் வழி நம் சுதந்திரமும், இறையாற்றலும் நம்மில் வளர்ச்சி காண்கிறது. மேலும், உண்மை திராட்சைச் செடியாகிய இயேசுவை அன்புசெய்வோர், ஆன்மீக அறுவடைக்காக விசுவாசத்தின் கனிகளை மிகுதியாக விளைவிக்கின்றனர். நாம் தொடர்ந்து இயேசுவோடு உறுதியாக ஒட்டிக்கொண் டிருக்கவும், நமது செயல்கள் அனைத்தும் அவரில் தொடங்கி, அவரிலேயே நிறைவு காணவும், நாம் இறையன்னையின் உதவியை வேண்டுவோம்.
   செப உரையின் இறுதியில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை இவ்வாறு கூறினார்: "இன்றைய பாஸ்கா மூவேளை செபத்தில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும், சிறப்பாக இந்தோ னேஷியாவில் இருந்து பெருமளவில் வந்திருக்கும் திருப்பயணிகளுக்கும் எனது வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னை உண்மையான திராட்சைச் செடி என்று குறிப்பிட்டு, அதன் கனி தருகின்ற கிளைகளாக இருக்க அவர் நம்மை அழைக்கின்றார். உலகெங்கும் வாழும் கடவுளின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையிலும் அன்பிலும் வளரவும், அவரால் ஆழமாக விதைக்கப்பட்ட தெய்வீக வாழ்வால் நீடித்த ஊட்டம்பெறவும் நான் செபிக்கிறேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!"