Friday, June 29, 2012

ஜூன் 29, 2012

கிறிஸ்துவைப் பின்பற்றியதால் பேதுருவும் பவுலும் இணை பிரியாதோராய் மாறினார்கள் -திருத்தந்தை

   ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி கொண்டா டப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின் போது, பேராயர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு திருத்தந்தை 'பாலியம்' வழங்குவது வழக்கம். இவ் வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனித பேதுரு, பவுல் பெருவிழாவின் போது, கடந்த ஓராண்டில் நியமனம்பெற்ற 44 பேராயர்களுக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் பாலியம் வழங்கும் திருப்பலி நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத் தந்தை 16 ம் பெனடிக்ட் பின்வரும் கருத்துக்களை எடுத்துரைத்தார். 
   (ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பிரதிநிதிகள் உட்ட) பல்வேறு சபைகளும் இணைந்து வந்திருக்கும் இந்தப் பெருவிழாவின் புனிதர்கள் கிறிஸ்தவ சமூகத்தை இன்னும் ஆழமாய் இணைக்கவேண்டும். திருச்சபையின் இரு பெரும் தூண்களாகக் கருதப் படும் புனிதர்கள் பேதுருவும், பவுலும் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் நற்செய்தியின் முழு வடிவமாக, இணைபிரியாத இருவராகக் கருதப்படுகின்றனர். உரோமில் அவர்களது விசுவாச சகோதரப் பிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. காயினும் ஆபேலும் உடன் பிறந்தவர்களாய் இருந்தாலும் பாவம் அவர்களை வேறுபடுத்தியது. பேதுருவும் பவுலும் மனித முறையில் வேறுபட்டவர்களாகவும், உறவில் முரண் பாடுகளைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனாலும் நற்செய்தியின்படி அவர் கள் வாழ்ந்ததால், கிறிஸ்துவின் அருள் அவர்களில் செயல்பட்டு புதிய முறையில் சகோதரர்கள் ஆனார்கள். கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் புதிய சகோதரத்துவ வாழ்வுக்கு செல்ல முடியும்.
   இயேசுவைப் பின்பற்றினால் மட்டுமே இந்த சகோதரத்துவ உறவுக்குள் ஒருவர் நுழைய முடியும் என்பதே இன்றைய பெருவிழா நம் ஒவ்வொருவருக்கும் தரும் முதன்மையான செய்தி. இதன் முக்கியத்துவம் முழுமையான ஒன்றிப்பை அக்க றையுடன் எதிர்நோக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரின் ஆசையில் பிரதிபலிக்கிறது. இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 16:13-19) பேதுரு, இயேசுவின் அடையாளத்தை மனிதத்திறன் அடிப்படையில் இல்லாமல் தந்தையாம் கடவுளின் வெளிப்பாடு மூலம் ஏற்றுக் கொள்கிறார். இயேசு மெசியா என்ற உண்மையை, இறைவனின் தூண்டுதலால் பேதுரு கூறியபோது, அவரைப் பாறை என்றும், மனித அறிவைக் கொண்டு இயேசுவின் பாடுகள் நிகழக்கூடாது என்று சொன்னபோது அவரைச் 'சாத்தான்' என்றும் இயேசு அழைக்கிறார். இங்கு மனிதத்திறனுக்கும் கடவுளின் கொடைக்கும் இடையே ஏற்படும் பதற்றத்தைக் காண்கிறோம். இரண்டு உணர்வு களும் இணைந்திருக்கும் இந்த காட்சி திருஆட்சிப் பீடத்தின் வரலாற்றை குறிப்பதாக அமைந்துள்ளது. ஒருபுறம் உன்னதத்தில் இருந்து வரும் ஒளியாலும் பலத்தாலும் வரலாற்று பயணத்தில் திருச்சபைக்கு அது அடித்தளம் அமைத்தது; மறுபுறம் மனித பலவீனங்களின் காரணமாக கடவுளின் செயலால் மட்டுமே நிலைத்திருக்கிறது.
   இறுதியாக பேதுருவின் பணியை அடையாளப்படுத்தும் திறவுகோல்கள்
தற்போ தைய பொது உரையாடலின் நிலையைக் குறித்து நிற்கிறது. 'இணைப்பதையும் தளர்த்துவதையும்' சுட்டிக்காட்டும் இரண்டு திறவுகோல்களும் ஒன்றையொன்று பலப்படுத்தும் ஒரே பொருளைத் தருகின்றன. போதகர்களின் மொழியில் இது ஒரு புறம் கோட்பாட்டு முடிவுகளை மேற்கொள்வதையும், மறுபுறம் ஒழுக்கம் சார்ந்த அதிகாரத்தை, அதாவது திருச்சபையில் இருந்து புறம்பாக்குதல் மற்றும் அதை நீக்குதல் ஆகியவற்றையும் குறிக்கிறது. விண்ணகத்திலும் மண்ணகத்திலும் இணை யான அதிகாரம் வழங்கப்படுவது, திருச்சபையில் பேதுரு மேற்கொள்ளும் முடிவு கள் கடவுளின் பார்வையில் மதிப்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. பேராயர்களுக்கு வழங்கப்படும் பாலியம், கிறிஸ்து என்ற மூலைக்கல் மீதும், பேதுரு என்ற பாறையின் மீதும் கட்டப்பட்டுள்ள திருச்சபையை பேராயர்கள் கட்டிக் காக்கவேண்டும் என்பதை நினைவுறுத்தும் ஓர் அடையாளமாக உள்ளது.

   புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவையொட்டி நண்பகல் மூவேளைச் செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வருமாறு கூறினார்.
   கலிலேயக் கடல் பகுதியில் வாழ்ந்த ஓர் எளிய மீன்பிடித் தொழிலாளரும், புறவினத்தாரின் திருத்தூதரும் உரோம் நகரின் வரலாற்றில் ஆழமாய் பதிந்த இரு பெரும் நாயகர்கள். இவ்விருப் புனிதர்களும் திருச்சபையின் ஒன்றிப்புக்கு மாபெரும் அடையாளங்கள். புனித பேதுருவின் தியாகத்திற்கு ஒரு சிறந்த நினைவுச் சின்ன மாக இப்புனித பேராலய பசிலிக்காவும், நாம் நின்றுகொண்டிருக்கும் சதுக்கமும் விளங்குகிறது, அதேபோல், புனித பவுலின் வாழ்வுக்கும், தியாகத்திற்கும் சாட்சி யாக உரோம் நகரின் புறப்பகுதியில் உள்ள புனித பவுல் பசிலிக்கா அமைந்துள்ளது. இந்த இரண்டு புனிதர்களின் நினைவுகள் நினைவுச்சின்னங்களில் மட்டும் இருந்து விடாமல், நமது மனங்களிலும் நிலைத்திருக்கவேண்டும். அவர்கள் காட்டிய நற் செய்தி வழியில் நாமும் நடக்க அவர்களின் பரிந்துரை நமக்குத் தேவை.
   மூவேளை செப உரையின் இறுதியில் இப்பெருவிழாவன்று
பாலியம் பெற்ற பேராயர்களைச் சிறப்பாக வாழ்த்திய திருத்தந்தை, இப்பேராயர்களுடன் இணைந்து இவ்விழாவில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த விசுவாசிகளையும் சிறப்பாக வாழ்த்தினார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை யும் வழங்கினார்.