Wednesday, August 22, 2012

ஆகஸ்ட் 22, 2012

கடவுளுக்கு தன்னையே கொடையாக கொடுத்து
வாழ்ந்த அன்பின் அரசி மரியா - திருத்தந்தை

   திருத்தந்தையரின் காஸ்தல் கந்தல்போ கோடை விடுமுறை இல்லத்தில் விடுமுறை நாட்களைச் செலவிட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று வழங்கிய பொது மறைபோதகத்தில் அரசியான அன்னை மரியாவின் திருவிழா பற்றிய சிந்தனைகளைப் பல மொழிகளில் எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   தூய கன்னிமரியாவை 'அரசி' என அழைத்துப் போற்றிய பக்தி முயற்சி பழங்காலத்திலே இருந்து வந்தாலும், இதனைத் திருவிழாவாகச் சிறப்பிக்கும் பழக்கம் அண்மையில்தான் ஏற்படுத்தப்பட்டது. 1954ம் ஆண்டில் மரியாள் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட போது அவ்வாண்டின் இறுதியில் திருத்தந்தை 12ம் பயஸ் இத்திரு விழாவை அறிவித்து, அவ்விழா நாள் மே மாதம் 31ம் தேதி என்றும் குறித்தார். ஆயினும், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்துக்குப் பின்னர் திருவழிபாட்டு நாள்காட்டியில் ஏற்பட்ட மாற்றத்தினால் இத்திருவிழா, மரியின் விண்ணேற்புக்கு எட்டு நாள்கள் கழித்து கொண்டாடப்படுகின்றது. மரியாவின் அரசுரிமைக்கும், அவர் ஆன்மாவோடும் உடலோடும் மகிமைப்படுத்தப்பட்டு அவரது திருமகனுக்கு அருகில் அமருவதற்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவை இந்தத் தேதி மாற்றத்தில் நாம் உணர முடிகின்றது. லூமென் ஜென்சியும் என்ற திருஅவை பற்றிய மறைக் கொள்கைத் திரட்டு எண் 59லும், “மரியா விண்ணுலக மாட்சிக்கு எடுத்துச் செல்லப் பெற்றார். அனைத்துலக அரசியாக இறைவனால் உயர்த்தப் பெற்றார். ஏனெனில் தன் மகனுக்கு அதிக நிறைவாக ஒத்தவராகுமாறு இவ்வாறு உயர்த்தப் பெற்றார்” எனச் சொல்லப்பட்டுள்ளது. மரியா இவ்வுலகப் பயணத்திலும் விண்ணக மகிமையிலும் தன் மகனோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருப்பதால் அவர், அரசியாக இருக்கிறார். இதுவே இந்த விழாவுக்கு அடிப்படை ஆதாரமாக அமைகின்றது. சிரியா நாட்டு புனித எப்ரேம் சொல்லியிருப்பது போல, மரியாவின் அரசுரிமை அவரது விண்ணகத் தாய்மையிலிருந்து வருகிறது; இவர் அரசர்க்கெல்லாம் அரசராகிய ஆண் டவரின் அன்னை; நமது வாழ்வாகவும், மீட்பாகவும், நம்பிக்கையாகவும் இயேசுவை நமக்குக் காட்டுகின்றார்.
   மரியா எவ்வகையான அரசி என்ற கேள்விக்குரிய பதில், இந்தப் பூவுலகின் மற்றும் வரலாற்றின் ஆண்டவராகிய அவரது திருமகனிடம் இருக்கின்றது. கிறிஸ்துவின் அரசுரிமை தாழ்ச்சியிலும் பணியிலும் அன்பிலும் ஆனது. பிலாத்துவின் முன்னிலை யில், கிறிஸ்து தமது திருப்பாடுகளின்போது அரசராக அறிவிக்கப்பட்டார். அவரது அரசுரிமை இவ்வுலக அதிகாரங்களோடு தொடர்பில்லாதது. இயேசு அரசர். இந்த அரசர், இறுதி இரவுணவில் தம் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவி அவர்களுக்கு விளக்கியது போல, தனது பணியாளர்களுக்குப் பணிபுரிபவர். மரியாவின் அரசுரிமை யும் இத்தகையதே. கடவுளுக்கும் மனித சமுதாயத்துக்கும் பணி செய்த அரசி மரியா. மீட்பின் திட்டத்தில் நுழைவதற்கு கடவுளுக்கு தன்னையே கொடையாக கொடுத்து வாழ்ந்த அன்பின் அரசி மரியா. பணியின் மற்றும் அன்பின் அரசுரிமையை செயல் படுத்திய மரியாவிடம் அவரது பிள்ளைகளாகிய நாமும் நமது வாழ்வின் துன்பங் களிலும், இருளான நேரங்களிலும் அவரின் உதவியைத் தொடர்ந்து நாடுவோம். அதன் மூலம் இவ்வுலகில் தொடர்ந்து பயணம் செய்வதற்குத் தேவையான அருளை யும் இரக்கத்தையும் பெறுவோம். அவரது திருமகனின் விண்ணக அரசிலும் பங்கு தாரர் ஆவோம்.
   இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, அனைத்துப் பயணிகளையும் வாழ்த்தி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.