Sunday, December 2, 2012

டிசம்பர் 2, 2012

கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்த தேவசகாயம் பிள்ளை
நமக்கு ஓர் எடுத்துக்காட்டு - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்து களை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்று திருச்சபை ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டை, விசுவாச ஆண்டோடு சேர்ந்து தொடங் குகிறது. திருவருகை காலத்தின் நான்கு வாரங்கள், மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்து செல்கிறது. திரு வருகை என்பதன் பழைய பொருள் அரசர் அல்லது பேரரசரின் சந்திப்பு என்பதாகும்; கிறிஸ்தவ மொழியில் இது கடவுளின் வருகையை, உலகில் அவரது உடனிருப்பைக் குறித்து நிற்கிறது. அனைத்துலகையும் வரலாற்றையும் உள்ளடக்கிய இந்த மறை பொருளில் இரண்டு அம்சங்கள் உள்ளன: இயேசு கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகை. இந்த இரண்டு தருணங்களும் கால வரிசையில் தொலைவில் இருந்தாலும், படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அவரது மரணம் மற்றும் உயிர்ப்பின் வழியாக, இயேசு ஏற்கனவே மனிதரையும், அனைத்துலகையும் உருமாற்றி விட்டார். ஆனால் முடிவு வருவதற்கு முன், அனைத்து நாடுகளிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென இயேசு கூறியிருக்கிறார். ஆண்டவரின் வருகை தொடர்கிறது, அவரது உடனிருப்பால் இந்த உலகம் நிரப்பப்பட வேண்டும். ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் வாக்களிக்கப்பட்ட மணமகளாம் திருச்சபை, ஆண்டவரோடு ஒன்றித்து, ஏற்கனவே தொடங்கிவிட்ட ஆண்டவரின் மாட்சிமிகு வருகைக்காக உழைக்கிறது.
   ஆண்டவரின் வருகைக்கு தயாராக இருக்கும் வகையில், நல்லொழுக்கத்தைப் பின்பற்றி வாழ வேண்டும். லூக்கா நற்செய்தியில், இயேசு தம் சீடர்களுக்குக் கூறுகிறார்: "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க் கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு ... எப்பொழுதும் விழிப்பா யிருந்து மன்றாடுங்கள்'' (லூக்கா 21:34,36) எனவே, எளிமையும் செபமும் தேவை. திருத்தூதர் பவுல், நம் உள்ளங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு,  நமக் குள் அனைவருக்காகவும் அன்பில் வளர்ந்து பெருக அழைப்பு விடுக்கிறார். உலகின் குழப்பங்கள், அலட்சியம் மற்றும் உலகப்போக்குகளுக்கு நடுவில், கிறிஸ்தவர்கள் கடவுளிடமிருந்து வரும் மீட்பை ஏற்றுக்கொண்டு, மலைமேல் அமைந்துள்ள நகரைப் போன்று பல வகையான வாழ்க்கை முறைகளில் சான்று பகர்கிறார்கள். "அந்நாள் களில் எருசலேம் பாதுகாப்புடன் வாழும்; மேலும், 'ஆண்டவரே நமது நீதி' என்னும் பெயரால் அழைக்கப்படும்" என்று இறைவாக்கினர் எரேமியா (33:16) அறிவிக்கிறார். வரலாற்றில் செயல்பட்டும் முழுமையாக உணரப்படாத கடவுளின் அன்புக்கும், நீதிக் கும் அடையாளமாக நம்பிக்கையாளர்களின் சமூகம் இருக்கிறது. கன்னி மரியாவின் வழிகாட்டுதலால், நம் ஒவ்வொருவரிடமும் கடவுளின் அன்பு, நீதி மற்றும் அமைதி யின் அரசு விரிவடையட்டும்!
   அன்பு சகோதர சகோதரிகளே, இன்று இந்தியாவின் கோட்டாறு மறைமாவட்டத் தில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொதுநிலை விசுவாசியான தேவசகாயம் பிள் ளைக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள திருச்சபையின் மகிழ்ச்சியில் நாமும் இணைவதோடு, அந்த பெரிய நாட்டின் கிறிஸ்தவர்கள் விசுவா சத்தை புதிய அருளாளர் பாதுகாக்கவும் செபிப்போம். தேவசகாயம் பிள்ளையின் அருளாளர் பட்ட விழாவை சிறப்பிக்கும் கோட்டாறு மக்களை நான் சிறப்பாக வாழ்த்துகிறேன். கிறிஸ்துவுக்கு அவர் பகர்ந்த சான்று, இந்த திருவருகை காலத்தின் முதல் ஞாயிறு அழைப்பு விடுக்கும் கிறிஸ்துவின் வருகைக்கான விழிப்புணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. நமது வாழ்வு மேலும் கிறிஸ்துவை மையப்படுத் தியதாக அமைய இந்த புனித காலம் நமக்கு உதவட்டும். கடவுள் உங்கள் அனை வரையும் ஆசீர்வதிப்பாராக!