Saturday, April 14, 2012

ஏப்ரல் 13, 2012

ட்ரையரில் உள்ள கிறிஸ்துவின் மேலங்கி திருச்சபையின் அடையாளமாக இருக்கின்றது - திருத்தந்தை

   ஜெர்மனியின் ட்ரையர் நகர கதீட்ரலில் இயேசு கிறிஸ்து தனது வாழ்நாளில் அணிந்திருந்த மேலங்கி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தப் புனித மேலங்கியை கான்ஸ்டன்டைன் பேரரசரின் தாயான புனித ஹெலேனா, ட்ரையர் நகருக்கு கொண்டு வந்தார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. பேரரசர் முதலாம் மேக்சி மிலியனின் வேண்டுகோளின்பேரில், இந்தப் புனித மேலங்கியை பேராயர் ரிச்சர்ட் வான் க்ரைப்பன்க்ளா 1512ம் ஆண்டு பொது மக்கள் பார்வைக்கு வைத்தார். அதன் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளில் மூன்று தடவைகள் மட்டுமே இது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இப்புனித மேலங்கி முதல்தடவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதன் 500ம் ஆண்டை முன்னிட்டு, இவ்வெள்ளி முதல் வருகிற மே 13 வரை  ட்ரையரில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த முதல் நாள் தொடக்க விழாவில் திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக கர்தினால் மார்க் அவ் வலெட் கலந்து கொண்டார்.
   இந்த நிகழ்வுக்கென ட்ரையர் ஆயர் ஸ்டீபன் அக்கர்மானுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "ட்ரையர் நகரில் அதிக பக்தியுடன் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதப் பொருளான கிறிஸ்துவின் தையலற்ற மேலங்கி, திருச்சபையின் அடையாளமாக இருக்கின்றது. கிறிஸ்து தமது திருப் பாடுகளின் போது அணிந்திருந்ததாக நம்பப்பட்டு, மிகுந்த பக்தியுடன் பாதுகாக்கப் பட்டு அதிவணக்கம் செய்யப்பட்டு வரும் இந்த மேலங்கி, தது சக்தியால் அல்ல, இறைவனின் செயலால் இந்நாள் வரை பாதுகாப்பாக இருக்கின்றது. இந்த மேலங்கி, சிலுவையில் அறையுண்ட நம் ஆண்டவர் தமது திருஇரத்தத்தால் புனிதப்படுத்தி திருச்சபைக்கு வழங்கிய பிளவுபடாத பரிசாகும். இதனால் இப்புனித மேலங்கி திருச் சபைக்கு அதன் மாண்பை நினைவுபடுத்துகின்றது."