Sunday, April 8, 2012

ஏப்ரல் 8, 2012

ஒளியே மனித வாழ்வுக்கும் உறவுகளுக்கும்
அடித்தளமாக அமைகிறது - திருத்தந்தை

   இந்த சனிக்கிழமை இரவு புனித பேதுரு பசி லிக்கா பேராலயத்தில் உயிர்ப்புப் பெருவிழாவின் திருவிழிப்பு திருவழிபாட்டைத் தலைமையேற்று நடத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஒளியை யும் இருளையும் மையப்பொருளாகக் கொண்டு வழங்கிய மறையுரையின் சுருக்கம்: 
   மனித வாழ்வுக்கும், மனித உறவுகள், தொடர்பு கள் அனைத்திற்கும் ஒளியே அடித்தளமாக அமை கிறது. படைப்பின் துவக்கத்தில் ஒளியை உருவாக் கிய இறைவன், கிறிஸ்துவின் உயிர்ப்பு வழியாக மீண்டும் ஒரு புதுப்படைப்பை உருவாக்கி, ஒளியை உலகில் மீண்டும் நிறுவினார்.
    படைப்பின் வரலாற்றில் ஒவ்வொன்றும் படைக்கப்பட்டதற்கு நாட்கள் குறிக்கப் பட்டதுபோல், உயிர்த்த கிறிஸ்து இறைவனின் புதிய படைப்பாக, புதிய நாளாக விளங்குகிறார். இன்று புதிதாக திருமுழுக்குப் பெறுவோர், இந்த புதிய ஒளியில் இணையும் வேளையில், கிறிஸ்துவின் புதிய வாழ்விலும் இணைகின்றனர். எனவேதான் திருஅவையின் ஆரம்ப நாட்களில் திருமுழுக்கை போட்டிஸ்மோஸ் அதாவது, அறிவொளி பெறுதல் என்று அழைத்தனர்.
   இன்றைய உலகில் கடவுளையும், நன்னெறி மதிப்பீடுகளையும் சூழ்ந்து வரும் இருள், உலகின் வாழ்வுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. நாம் உருவாக்கி வரும் தொழில் நுட்பங்களால் இந்த ஆபத்து ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது. செயற்கை விளக்குகளால் நமது நகரங்களை பெருமளவு ஒளிமய மாக்குவதால், நம்மால் விண்ணில் ஒளிரும் விண்மீன்களையும் காண முடிவ தில்லை. நம் வாழ்வைச் சூழ்ந்துள்ள செயற்கை ஒளியால் உண்மை அறிவொளி யைக் காணமுடியாமல் இருப்பதற்கு இது ஓர் அடையாளம்.
   திருச்சபையின் ஓர் அடையாளமாய் பாஸ்கா மெழுகுத்திரி அமைகிறது. இந்த மெழுகு தன்னையே கரைப்பதால் மட்டுமே ஒளி தரமுடியும். இந்த மெழுகு உருவாக பல தேனீக்கள் இணைந்து உழைக்க வேண்டியிருந்தது என பாஸ்காப் புகழுரையில் கேட்டோம். விசுவாசிகளாகிய நாம் ஒருங்கிணைந்து உழைப்பதன் வழியாகவும், நம்மையே தியாகம் செய்வதன் வழியாகவும் இந்த உலகை நாம் ஒளிமயமாக்க முடியும். இறையொளியின் மகிழ்வை நாம் ஒவ்வொருவரும் உணரவும், இந்த ஒளியைப் பிறருக்கு எடுத்துச் செல்லும் கருவிகளாய் மாறவும் இறைவனின் அருள் வளங்களை மன்றாடுவோம்.