இயேசுகிறிஸ்து திருவழிபாட்டின் துணைகொண்டு
தன் மீட்புப்பணியை ஆற்றுகிறார் - திருத்தந்தை
தன் மீட்புப்பணியை ஆற்றுகிறார் - திருத்தந்தை
காஸ்தல் கந்தல்போவிலிருந்து வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்திற்கு வந்து புதன் பொது மறை போதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாரமும் செபம் குறித்த தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார்.
கடந்த சில வாரங்களாக புதன் மறைபோதகங் களில், செபம் குறித்து திருவிவிலியத்தில் கூறப் பட்டுள்ளவை குறித்து ஆழமாகச் சிந்தித்து வரும் நாம், இன்று செபத்தின் மற்றொரு விலைமதிப்பற்ற ஆதாரமாகிய திருவழிபாடு குறித்து நம் பார்வை யைத் திருப்புவோம். திருவழிபாடு என்ற கிரேக்கச் சொல், 'மக்களுக்காக மக்களால் ஆற்றப்பட்ட பணி' என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இங்கு 'மக்கள்' என்பது இறைவனின் புதிய மனிதக் குலத்தைக் குறிக்கின்றது. இந்தப் புதிய மனுக்குலம் இயேசுகிறிஸ்துவால் கொண்டுவரப்பட்டது. இந்த மனுக்குலம் தன்னிலையிலேயே உருவானதோ, இரத்த தொடர்பு கொண்டதோ, நாடு மற்றும் நில எல்லைகளால் கட்டுப்பட்டதோ அல்ல; மாறாக, இயேசுவின் பாஸ்கா மறையுண்மையால் உருவாக்கப்பட்டது. திருவழிபாடு என்பது 'இறைவனின் செயல்'. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் உரைப்பது போல், நம் மீட்பரும் தலைமைக்குருவுமான இயேசுகிறிஸ்து, திருவழிபாட்டின் துணைகொண்டு, தன் மீட்புப்பணியை திருச்சபைக்குள் இருந்துகொண்டு திருச்சபை யோடு, திருச்சபை வழியாகத் தொடர்ந்து ஆற்றுகிறார்.
கடவுள் செயலாற்றுகிறார், நாமும் அச்செயல்பாட்டில் இணைகிறோம், பலன்பெறு கிறோம். இதுவே, திருவழிபாட்டின் மிக உன்னத வியத்தகு நிகழ்வு. இறைவனே அனைத்திற்கும் முதன்மையானவர் என்பதை திருவழிபாடு நமக்கு நினைவூட்டு கிறது. அதற்கேற்ப இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் தன் பணிகளை, திரு வழிபாடு குறித்த கலந்துரையாடலுடனேயே தொடங்கியது. திருவழிபாட்டின் அடிப்ப டைத் தத்துவம் என்னவென்றால், தந்தையாம் இறைவனை நோக்கிய தொடர்புறவே ஆகும். தந்தையின் மீட்பு அன்பானது, அவர் மகனின் மரணம் மற்றும் உயிர்ப்பில் தன் உச்ச நிலையை அடைகிறது. திருவழிபாட்டிலேயே நம் இதயங்களை நாம் மேல் நோக்கி எழுப்புகிறோம். திருவழிபாட்டில் நாம் நம்முள் எழும்பும் செபத்தில் நம் சகோதரர்களுடன் ஒன்றிணைந்து கூடி, இறைவார்த்தைக்கு நம்மைத் திறந்தவர்க ளாக்குகிறோம். இச்செபமானது இறைமகன் வழி, தூய ஆவியில் இறைத்தந்தையை நோக்கியதாக உள்ளது.
இவ்வாறு, தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீ ரையும் அளித்தார்.