Wednesday, October 31, 2012

அக்டோபர் 31, 2012

திருச்சபையைத் தாயாக கொள்ளாத எவரும் கடவுளைத்
தந்தையாகக் கொண்டிருக்க முடியாது - திருத்தந்தை

   வத்திக்கானில் மழை தூறிக் கொண்டிருந் ததால், தூய பேதுரு பேராலய வளாகத்தில் குடைகளைத் தாங்கியவர்களாக திருப்பய ணிகள் கூடியிருக்க, திருத்தந்தை 16ம் பென டிக்ட் அவர்களுக்கு இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார்.
   நம்பிக்கை ஆண்டு தொடர்புடைய நம் மறைக்கல்வித் தொடரில், விசுவாசம் என் பது தனிப்பட்ட மனிதரின் ஆழ்ந்த அனுப வம் என்பதைக் கண்டோம். நம் வாழ்வை மாற்றியமைத்து அதனை வளப்படுத்தும் இறைவனின் கொடையே விசுவாசம். அதேவேளை, விசுவாசம் எனும் கொடையா னது திருச்சபை சமூகத்தில், அச்சமூகம் வழியாகவே வழங்கப்படுகிறது. திருமுழுக் கில் நான் திருச்சபையின் விசுவாசத்தைப் பெற்று அதை என்னுடையதாக உரிமை யாக்கி கொள்கிறேன். விசுவாச அறிக்கையை வெளியிடுவதிலும், திருவருட்சாதனங் களை ஒன்றிணைந்து கொண்டாடுவதிலும் என்னுடைய தனிப்பட்ட விசுவாசம், தன் வெளிப்பாட்டைக் கண்டுகொள்கிறது. தூய ஆவி எனும் கொடை வழியாக கிறிஸ்து வில் நாம் வாழும் புதிய வாழ்வு, திருச்சபை சமூகத்துக்குள் பெறப்பட்டு ஊட்டமளிக் கப்படுகிறது. இவ்வகையில் பார்த்தால், திருச்சபை நம் தாயாக உள்ளது. புனித சிப்ரியன் கூறுவதுபோல், "திருச்சபையைத் தாயாகக் கொண்டிராத எவரும், கடவு ளைத் தந்தையாகக் கொண்டிருக்க முடியாது." திருச்சபையின் உயிருள்ள பாரம்பரி யத்தில் உறைந்திருக்கும் நாம், பெற்ற விசுவாசத்தை செயல்படுத்தி அதில் வளர்வ துடன், இவ்வுலகில் இயேசுவின் ஒளி மற்றும் அமைதியின் கலங்கரை விளக்குக ளாகத் திகழ்வோமாக!
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அதன் இறுதியில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வீசிய புய லால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செபங்களுக்கு உறுதி கூறியதுடன், அவர்களுக் காக உழைக்கும் அனைத்து தரப்பினருடன் தனது ஒருமைப்பாட்டையும் வெளியிட் டார். பல்வேறு மொழிகளில் புதன் மறைபோதகத்தை வழங்கிய பின், திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, October 28, 2012

அக்டோபர் 28, 2012

ஒருவர் வாழ்வின் பாதையில் நடக்க விரும்பினால்
அவருக்கு இறைவனின் ஒளி தேவை - திருத்தந்தை

  13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை, இம்மாதம் 7ந்தேதி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தித் தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறன்று அதனை கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு செய்தார். பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவால் பார்வை பெற்றதை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாச கத்தை அடிப்படையாக வைத்து இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரை நிகழ்த்தினார்.
   பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெற்ற புதுமை புனித மாற்கு நற்செய்தியின் அமைப்பில் குறிப் பிடத்தக்க இடத்தில் உள்ளது. ஜோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எருசலேம் புனித நகரத்துக்குச் செல்லும் ஏற்றமான பாதையில் இயேசு எரிக்கோவைக் கடந்து செல்கி றார். அவர் எரிக்கோவை விட்டு வெளியே சென்ற போது திமேயுவின் மகன் பர்த் திமேயு சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்று மாற்கு நற்செய்தியாளர் சொல்கிறார். புனித மாற்கு நற்செய்தி முழுவதுமே நம்பிக்கையின் பயணமாகும். இந்த நம்பிக்கை, இயேசுவின் பயிற்சிப் பள்ளியில் படிப்படியாக வளர் கிறது. இந்த நம்பிக்கையின் பயணத்தில் முதலில் சீடர்கள் வந்தாலும், மற்றவர் களும் இதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் பர்த்தி மேயு. இவர் பார்வை பெற்றது, இயேசு தமது திருப்பாடுகளுக்கு முன்னர் ஆற்றிய கடைசி அற்புதமாகும். ஒருவர் மெய்மையை உண்மையிலேயே அறிய விரும்பி னால், ஒருவர் வாழ்வின் பாதையில் நடக்க விரும்பினால் அவருக்கு நம்பிக்கையின் ஒளியாகிய இறைவனின் ஒளி தேவைப்படுகின்றது. அத்தகைய மனிதரையே பர்த் திமேயு குறித்து நிற்கிறார்.
   பர்த்திமேயு பிறவியிலேயே பார்வை இழந்தவர் அல்ல. இவர் பார்வையை இழந் திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் இருப்பவரை, வாய்ப்பைப் பயன்படுத்தி இயேசுவை சந்தித்து எப்படிக் குணம் பெறுவது என்பதை அறிந்திருப்பவரைக் குறித்து நிற்கிறார். நம்பிக்கையுடன் வாழ்ந்த பர்த்திமேயு, கிறிஸ்துவைச் சந்திப்பதில் மீண் டும் பார்வை பெற்று, அத்துடன் தனது மாண்பின் முழுமையையும் அடைந்து இயேசு வோடு தனது பயணத்தைத் தொடர்கிறார். பர்த்திமேயு பற்றி வேறு எதுவும் சொல் லாத நற்செய்தியாளர், நம்பிக்கையின் ஒளியில் இயேசுவைப் பின்செல்லும் சீடத் துவ வாழ்வு என்ன என்பதை பர்த்திமேயுவில் நமக்குக் காட்டுகிறார். பர்த்திமேயு, ஏதோ ஒரு வளமை நிலையிலிருந்து நொடித்துப் போனவர். பார்வையையும் இழந்து, பிச்சை எடுப்பதற்கும் அந்நிலை அவரை உட்படுத்தியிருக்கிறது. புனித அகுஸ்தீனா ரின் இந்த விளக்கம் இன்று நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.
   நாம் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத வளங்களை நாமும் இழக்க முடியும். இங்கு பொருளாதார மற்றும் நிதி வளங்கள் பற்றி நான் பேசவில்லை, நீண்ட காலத் துக்கு முன்னர் நற்செய்தி அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை பர்த்திமேயு குறித்து நிற்கிறார் எனச் சொல்லலாம். இப்பகுதிகளில் நம்பிக்கை ஒளி மங்கி மக்கள் இறைவனைவிட்டு விலகி இருக்கின்றனர். கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் சொல்ல வேண்டுமானால் இம்மக்கள் தங்களது கம்பீரமான மாண்பிலிருந்து வீழ்ந்து, பாது காப்பான மற்றும் நல்ல வழியை இழந்து, தங்களுக்கேத் தெரியாமல் வாழ்வதன் பொருள் தேடும் பிச்சைக்காரர்களாக ஆகியுள்ளார்கள். புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி தேவைப்படும் பலரில் இவர்களும் உள்ளடங்குவர். இறைமகன் கிறிஸ்துவாகிய இயேசுவுடன் இவர்கள் புதிதாகச் சந்திப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது. கிறிஸ்து வால் இவர்களின் கண்களைத் திறந்து அவர்களுக்கான வழியைப் போதிக்க முடியும். நம்பிக்கையின் ஒளி பலவீனமடைந்துள்ள மற்றும் இறைவனின் நெருப்பு அணைந்து போனதாக இருக்கும் இடங்களில் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டும் என்பதை இஞ் ஞாயிறு நற்செய்தி நமக்குக் கூறுகிறது.
   இந்தப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருச்சபையின் வாழ்வு முழுவதிலும் செயல்படுத்தப்பட வேண்டும். திருமுழுக்கு, உறுதிபூசுதல், திருநற்கருணை ஆகிய மூன்று திருவருட்சாதனத் தயாரிப்புக்களுக்குத் தகுந்த மறைக்கல்வி வழங்கப்பட வேண்டும். இறைவனின் இரக்கத் திருவருட்சாதனமான ஒப்புரவு அருட்சாதனத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட வேண்டும். வாழ்வின் இறுதிப்பயண நோயில்பூசு தல் திருவருட்சாதனம் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மேலும், இயேசு கிறிஸ்துவை இன்னும் அறியாதோருக்கு மீட்பின் செய்தியை அறி விக்க வேண்டியது திருச்சபையின் பணியாகும். ஆப்ரிக்கா, ஆசியா, ஓசியானியா ஆகிய கண்டங்களில் பல பகுதிகளில் நற்செய்தி இன்னும் முதல்முறை அறிவிக்கப் படாமலே இருக்கின்றது என ஆயர்கள் மாமன்றத்தில் கூறப்பட்டது. எனவே, திருச் சபையில் புதிய மறைப்பணி ஆர்வம் ஏற்படுவதற்குத் தூய ஆவியிடம் செபிப்போம். அனைத்து மக்களும் இயேசு கிறிஸ்துவையும் அவரது நற்செய்தியையும் அறிவதற்கு உரிமை உள்ளவர்கள். எனவே குருக்கள், துறவிகள், பொதுநிலை விசுவாசிகள் அனைவரும் நற்செய்தியை அறிவிக்கும் கடமையைக் கொண்டுள்ளார்கள்.
   திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தங்களது திருமுழுக்குக்கு ஏற்ப வாழவில்லை. இத்தகைய மக்கள், எல்லாக் கண்டங்களிலும், குறிப்பாக, உலகாயுதப்போக்கு அதிக மாகவுள்ள நாடுகளில் இருப்பதாக ஆயர்கள் மாமன்றத்தில் கூறப்பட்டது. எனவே, பராம்பரிய மற்றும் ஆண்டுக்கணக்காய்ச் செய்துவரும் மேய்ப்புப்பணி முறைகளை யும் கடந்து புதிய முறைகளைக் கடைப்பிடிக்கும் வழிகளைத் திருச்சபைத் தேடுகி றது. அன்பாக இருக்கும் இறைவனில் வேரூன்றிய உரையாடல் மற்றும் நட்புணர் வோடு கிறிஸ்துவின் உண்மையை உலகின் பல்வேறு கலாச்சாரங்களுக்கு வழங்கும் புதிய மொழிகளை வளர்த்துக் கொள்ளும் வழிகளைத் திருச்சபைத் தேடுகிறது. புற வினத்தார் முற்றம் என்ற பெயரில் ஏற்கனவே சில முக்கிய நகரங்களில் மறைப்பணி செய்யப்பட்டு வருகிறது. புதிய நற்செய்தி அறிவிப்பாளர்கள், இயேசு கிறிஸ்து வழி யாக இறைவனால் குணமடைந்த அனுபவத்தைக் கொண்டவர்கள் போல் இருக்கிறார் கள். ஆண்டவரே, எங்களில் இருக்கின்ற அனைத்துப் பார்வையற்ற தன்மையையும் விலக்கி உண்மையின் வழியில் செல்ல எமக்கு உதவும்!
   திருப்பலிக்குப் பின்னர் மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை, புதிய நற் செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுற் றிருக்கும் இவ்வேளையில், கிறிஸ்துவின்மீதான நமது நம்பிக்கையையும், மகிழ்ச்சி மற்றும் குணப்படுத்தலின் அவரின் நற்செய்தியை பரப்புவதற்கான நமது அர்ப்பணத் தையும் புதுப்பிப்போம் என்றார். கியூபா, ஹெய்ட்டி, ஜமய்க்கா, பகாமாஸ் ஆகிய நாடுகளில் கடும் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களையும் திருத் தந்தை நினைவுகூர்ந்தார்.

Wednesday, October 24, 2012

அக்டோபர் 24, 2012

மனிதர்களாகிய நாம் வாழ்வதன் ஆழமான அர்த்தத்தை
கடவுள் நமக்கு வெளிப்படுத்துகிறார் - திருத்தந்தை

   நம்பிக்கை ஆண்டில் இடம்பெறும் தனது வழக்கமான புதன் பொதுமறைபோதகங்களில் இந்த நம்பிக்கை ஆண்டு சிந்தனைகளை வழங்கவிருப்பதாகக் கடந்த புதன் பொது மறைபோதகத்தில் அறிவித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று நம்பிக்கை குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
   நம்பிக்கை ஆண்டின் நமது மறைக்கல்வித் தொடரின் தொடர்ச்சியாக நம்பிக்கையின் இயல்பு குறித்து இன்று பார்ப்போம். நம்பிக்கை என்பது, கடவுள் பற்றிய அறிவை மட்டும் வெறுமனே கொண்டிருப்பதற்கும் மேலாக, அவரை வாழ்வில் சந்திப்பதாகும். கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றில் தம்மையே வெளிப்படுத்திய கடவுளை நம்பிக்கை வழியாக அறிந்து அன்புகூர்கிறோம். அவ்வாறு செய்யும்போது, மனிதர்களாகிய நாம் வாழ்வதன் ஆழமான அர்த்தத்தையும் உண்மையையும் அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். இந்த நம் காலங்களின் ஆன்மீகக் குழப்பங்களுக்கு மத்தியில் உறுதியான பற்றுறுதியையும் வழியையும் நம்பிக்கை நமக்கு அளிக்கின்றது. அனைத்துக்கும் மேலாக, நம்பிக்கை ஒரு விண்ணகக் கொடை. இறைவார்த்தைக்கு நமது இதயங்களையும் மனங்களையும் திறக்கவும், திருமுழுக்கு வழியாக திருச்சபைக்குள் அவரது இறைவாழ்வில் பங்குதாரர்கள் ஆகவும் நம்பிக்கை நமக்கு உதவுகிறது. எனினும், நம்பிக்கை, நமது அறிவையும் சுதந்திரத்தையும் சார்ந்து இருக்கும் ஓர் ஆழமான மனிதச் செயலாகவும் இருக்கின்றது. கடவுளது அழைப்பையும் அவரது கொடையையும் நாம் வரவேற்கும்போது நமது வாழ்வும், நம்மைச் சுற்றியுள்ள உலகமும் மாற்றம் அடைகின்றன. நமது நம்பிக்கையை நாம் முழுமையாக வாழவும், நம்பிக்கை உறுதியளிக்கும் நித்திய வாழ்வுக்கு மற்றவர்கள், தங்களின் இதயங்களைத் திறந்து வைத்து, இறைவார்த்தையைக் கேட்டு அதனை ஏற்கவும் இந்த நம்பிக்கை ஆண்டு உதவுவதாக!
   வருகிற நவம்பர் 24ம் தேதி இடம்பெறும் நிகழ்வில் பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் ஜேம்ஸ் மைக்கேல் ஹார்வே, லெபனனின் மாரனைட் ரீதியின் அந்தியோக்கிய முதுபெரும் தலைவர் பெச்சரா பெட்ரோஸ் ராய், சீரோ-மலங்கரா ரீதி பேராயர் பசெலயொஸ் கிளீமிஸ் தொட்டுங்கல், நைஜீரியாவின் அபுஜா பேராயர் ஜான் ஒலோருன்பெமி ஒனையேகன், கொலம்பியாவின் பொகோட்டா பேராயர் ரூபன் சலாசர் கோமெஸ், பிலிப்பைன்சின் மனிலா பேராயர் லூயிஸ் அன்டோனியோ தாக்லே ஆகிய ஆறு பேர் கர்தினால்கள் அவையில் புதிதாக இணையவிருக்கிறார்கள். புனித பேதுருவின் வழிவருபவர் தமது சகோதரர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் திருப்பணியில் அவருக்கு உதவ வேண்டியவர்கள் கர்தினால்கள். இவர்களுக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
   இவ்வாறு தனது புதன் பொதுமறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, 16ம் பெனடிக்ட், ஜப்பான், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, கானடா, பிரிட்டன், டென்மார்க், நார்வே, நைஜீரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து வந்திருந்த பயணிகளை வாழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். திருச்சபையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை, இந்த ஆறு பேருடன் சேர்ந்து 122 ஆக உயர்ந்துள்ளது.

Sunday, October 21, 2012

அக்டோபர் 21, 2012

புதிய நற்செய்திப் பணிக்கு இன்றைய ஏழு புனிதர்களும்
சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றனர் - திருத்தந்தை

   மறைபரப்பு பணி ஞாயிறான இன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஏழு அருளாளர்களைப் புனிதர்களாக அறிவித்தத் திருச்சடங்கை நிகழ்த்திய திருத்தந்தை, அவர்க ளின் புனித வாழ்வைப் பற்றி தனது மறையுரையில் எடுத்துரைத்தார்.
   ஆண்டவர் இயேசு தனது திருப்பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மறைபொருளை நிறைவு செய்ய எருசலேம் செல்லும் வழியில் கூறிய வார்த் தைகளுக்கு திருச்சபை இன்று மீண்டும் செவிமடுக் கிறது. இவ்வார்த்தைகள் கிறிஸ்துவின் தியாகத்தா லும், முழுமையான தற்கையளிப்பாலும் குறிக்கப் பட்ட அவரது மண்ணகப் பணியின் பொருளைத் தருகின்றன. அக்டோபர் மாதத்தின் மூன்றாவது ஞாயிறான இன்று, உலக மறைபரப்பு ஞாயிறை சிறப்பிக்கும் நாளில், இந்த வார்த்தைகளுக்கு சிறப்பு கவனத்துடன் செவிமடுத்து, தன்னை முழுவதும் கொடுத்து, தனது வாழ்வையே பலியாக்கிய கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின் பற்றி மனித குலத்துக்கும், நற்செய்திக்கும் சேவை புரிவதற்கான முழுமையான அர்ப் பணிப்பைப் புதுப்பிக்கிறது.
   “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பல ருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்.” இந்த வார்த் தைகளே இன்று திருச்சபை மாட்சிக்குரிய புனிதர் பட்டியலில் இணைக்கும் ஏழு ஆண், பெண் அருளாளர்களின் வாழ்வுக்கு அடிப்படையாக இருந்தது. பல்வேறு நாடு களைச் சார்ந்த ஜாக்வஸ் பெர்தியூ, பேத்ரோ கலுங்சோட், ஜியோவன்னி பாட்டிஸ்டா பியமார்ட்டா, மரியா டெல் கார்மெலோ, மரியானே கோப், கேத்தரி தெகக்வித்தா, அன்னா ஸ்காபர் ஆகிய 7 பேரும் உலக மறைபரப்பு பணி நாளன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்பெறுவது பொருத்தமானது. தொன்றுதொட்டு திருச்சபை ஆற்றி வருகின்ற நற்செய்திப் பணிக்கும், தற்போது நாம் சிந்திக்கும் புதிய நற்செய்திப் பணிக்கும் இன் றைய ஏழு புனிதர்களும் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றனர்.

Wednesday, October 17, 2012

அக்டோபர் 17, 2012

நம்மைப் படைத்த இறைவனை அறியவும் அன்பு
செய்யவும் விசுவாசம் உதவுகிறது - திருத்தந்தை

   கடந்த ஞாயிறன்று திருச்சபையில் நம்பிக்கை யின் ஆண்டைத் தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதன் பொது மறைபோதகத்தில் நம்பிக்கை ஆண்டு குறித்த புதிய தொடர் ஒன்றைத் தொடங்கினார்.
  
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவோடு சிறப்பிக்கப்படும் நம்பிக்கை ஆண்டு குறித்த திருச்சபை கொண்டாட்டங்களுடன் இணங்கிச் செல்லும் விதமாக இன்றைய புதன் மறைபோதகத்திலிருந்து, புதிய தொடர் ஒன்றைத் தொடங் குகிறேன். இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் என்னும் கொடையில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் கொண்டிருக்க இந்த நம்பிக்கையின் ஆண்டு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து, நம் இவ்வுலக வாழ்வின் இறுதி இலக்கை நமக்குக் காட்டுகிறார். விசுவாசம் நம் வாழ்வை மாற்றி அமைக்கிறது, நம்மைப் படைத்த இறைவனை அறியவும் அன்பு செய்யவும் உதவுகிறது. அவரின் விருப்பத்திற்கு இயைந்த வகையில் சுதந்திரமாக வாழவும், உண்மையான மனிதாபி மான மற்றும் சகோதரத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கவும் அந்த விசுவாசம் உதவுகிறது. நம் இந்தப் புதன் மறைபோதகத் தொடர், அப்போஸ் தலிக்க விசுவாச அறிக்கையின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விசுவா சத்தின் மைய உண்மைகளைக் குறித்து எடுத்துரைப்பதாக இருக்கும். இயேசுவின் மறையுண்மைகள் பற்றிய முழு அறிவை நோக்கிச் செல்லவும், இயேசுவின் உட லாம் திருச்சபையின் வாழ்வில் ஆழமாகப் பங்குகொள்வதற்கும் இந்த நம்பிக்கை யின் ஆண்டு அனைத்து விசுவாசிகளையும் வழிநடத்திச் செல்வதாக!
   இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆஸ்தி ரேலியாவிலிருந்து வந்திருந்த இசுலாமிய - கத்தோலிக்க கல்விக் குழு மற்றும் வட அமெரிக்க யூதக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் திருப்பயணிகளையும் வாழ்த்தி அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, October 14, 2012

அக்டோபர் 14, 2012

செல்வம் செய்ய இயலாததை கிறிஸ்துவின்
அன்பு நிறைவேற்றுகின்றது - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை நிகழ்த்திய திருத் தந்தை 16ம் பெனடிக்ட், இன்றைய நற் செய்தி வாசகத்தின் கருத்தை விளக்கினார்.
   கிறிஸ்துவைப் பின்செல்ல விரும்பிய இளம் செல்வர் ஒருவர் முகம் வாடி வருத் தத்தோடு திரும்பிச்சென்றதை இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் விளக்குகிறது. கடவு ளின் கட்டளைகள் அனைத்தையும் இளமை முதல் கடைப்பிடித்து வந்த அந்த இளைஞர் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடையாததால் இயேசுவிடம் வந்து நிலைவாழ் வினை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். ஒவ்வொ ருவரையும் போலவே இந்தச் செல்வரும் ஒருபக்கம் நிலைவாழ்வின் முழுமை நோக்கிக் கவரப்பட்டார், மறுபக்கம், தனது செல்வத்தைச் சார்ந்து வாழ்ந்த அந்த இளைஞர் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் நிலைவாழ்வை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். எனவேதான் தனக்கு உள்ளவற்றை யெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டுத் தன்னைப் பின்செல்லுமாறு இயேசு சொன்னபோது அதைப் புறக்கணித்தார். அவரது செயல், செல்வர்கள் இறை யாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்ற இயேசுவின் கருத்துக்கு அடிப்படையாக உள்ளது. இறையாட்சிக்குப் பணிபுரிவதற்குச் செல்வங்கள் தடைகளை முன்வைக்காவிட்டாலும், மனித சமுதாயத்தின் உள் ளார்ந்த தேவைகளை நிறைவேற்றும் வழிகளில் செல்வம் செய்ய இயலாததை கிறிஸ்துவின் அன்பு நிறைவேற்றுகின்றது. நிறைய செல்வங்கள் வைத்திருக்கும் மனிதரின் இதயத்தைக் கடவுளால் வெல்ல முடியும். இது மனிதரால் இயலாதது, ஆனால் கடவுளுக்கு எல்லாம் இயலக்கூடியதே!

Thursday, October 11, 2012

அக்டோபர் 11, 2012

இன்றைய ஆன்மீகப் பாலைவன உலகில் கிறிஸ்துவை
மீண்டும் அறிவிக்க வேண்டும் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் நடைபெற்ற திருப்பலியில் இவ்வியாழனன்று விசுவாச ஆண்டை தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வரு மாறு மறையுரை வழங்கினார்.
   இன்று திருச்சபை ஒரு புதிய விசுவாச ஆண்டையும் புதிய நற்செய்தி அறிவிப்பு பணியையும் பரிந்துரைக்கின்றது என் றால் இது கடந்த ஐம்பது ஆண்டுகளின் நிறைவைக் கவுரவப் படுத்துவதற்காக அல்ல, ஆனால், கடந்த ஐம்பது ஆண்டுக ளைவிட இன்று இன்னும் அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே. இந்தத் தேவைக்கானப் பதில், திருத்தந்தை யரால், ஆயர்கள் மாமன்றத் தந்தையரால் மற்றும் பொதுச் சங்கக் கொள்கைத் திரட்டுகளால் விரும்பப்பட்ட ஒன்றாகும். புதிய நற்செய்தி அறிவிப்பு பணியை ஊக்குவிப்பதற்கென ஒரு திருப்பீட அவை உருவாக்கப்பட்டதும் இந்தச் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இன்றைய உலகில் ஆன்மீகப் பாலைவனம் வளர்ந்து வருவதை அண்மைப் பல ஆண்டுகளாகக் காண முடிகின்றது. கடவுள் இல்லாத உலகமும் மனித வாழ்வும் எப்படி இருக்கும் என்பதற்கு வரலாற்றின் சில பக்கங்கள் மூலம் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கக் காலத்திலே ஏற்கனவே பார்க்கக் கூடியதாய் இருந்தது. ஆனால் இப்பொழுது இதனை நாம் ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றிலும் பார்க்க முடிகின்றது.

   ஆயினும், இந்தப் பாலைவன மற்றும் இந்த வெறுமை அனுபவத்திலிருந்து, விசு வசிப்பதன் மகிழ்ச்சியையும் அதன் உயிர்த்துடிப்பான முக்கியத்துவத்தையும் நாம் மீண்டும் கண்டுணருகிறோம். நாம் வாழ்வதற்கு எது முக்கியம் என்பதன் மதிப்பை இந்தப் பாலைவனத்திலிருந்து மீண்டும் கண்டுணருகிறோம். எனவே இன்றைய உல கில் இறைவன் மீதான தாகத்தின் மற்றும் வாழ்வின் மூலக்காரணமான பொருளைத் தேடுவதன் எண்ணற்ற அடையாளங்கள் வெளிப்படையாக அல்லது மறைவாக அடிக் கடி வெளிப்படுத்தப்படுகின்றன. இந்தப் பாலைவனத்திற்கு விசுவாசத்தின் மக்கள் தேவைப்படுகிறார்கள். தங்களது சொந்த வாழ்வால் நம்பிக்கையை உயிர்பெறச் செய்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வழிகாட்டும் விசுவாசிகள் தேவைப்படுகிறார் கள். வாழ்ந்து காட்டப்படுகிற விசுவாசம், நம்பிக்கையின்மையில் இருந்து விடுதலை யாக்கும் கடவுளின் அருளுக்கு இதயத்தைத் திறக்கின்றது. எக்காலத்தையும்விட இக் காலத்தில் நற்செய்தி அறிவித்தல் என்பது கடவுளால் மாற்றம் அடைந்த புதிய வாழ் வுக்குச் சான்று பகர்வதாகும். இதன் மூலம் கடவுளின் பாதையைக் காட்ட முடியும்.
   விசுவாச ஆண்டு என்பது இன்றைய உலகில் பயணத்திற்கு எது தேவையோ அவற்றை மட்டும் நம்மோடு எடுத்துக் கொண்டு பாலைவனங்களில் திருப்பயணங் கள் மேற்கொள்வதாகும். நம் ஆண்டவர் இயேசு தம் சீடர்களை மறைப்பணிக்கு அனுப்பும்போது சொன்னது போல, பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக் கொண்டு போக வேண்டாம் எனக் கூறியதை நினைவுகூ
ர் வோம். ஆனால் நற்செய்தி, பொதுச்சங்க ஏடுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏட்டில் வெளிப்படுத் தப்பட்டுள்ள திருச்சபையின் விசுவாசம் ஆகியவை இதில் நமக்குச் சுடர்விடும் வெளிப்பாடுகளாக உள்ளன. எனது பெருமதிப்புக்குரிய மற்றும் அன்புச் சகோதரர் களே, 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி இறைவனின் தாயாம் அன்னை மரியா வின் விழாவாக இருந்தது. இந்த மரியாவிடம் இந்த விசுவாச ஆண்டை அர்ப்பணிப் போம். புதிய நற்செய்தி அறிவிப்பு பணிக்கு அன்னை மரியா வழிகாட்டும் விண்மீ னாக இருக்கிறார்.

Wednesday, October 10, 2012

அக்டோபர் 10, 2012

மனிதர் கடவுளை மறக்கும்போது மனித மாண்புக்கு
இன்றியமையாத ஒன்றை மறக்கிறார் - திருத்தந்தை

   உலக ஆயர்கள் மாமன்றத்தை கடந்த ஞாயிறன்று தொடங்கி வைத்து, இவ்வியாழனன்று 'விசுவாச ஆண்டை’ தொடங்கி வைப்பதற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 50 ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 11ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கி வைக்கப்பட்டதன் நோக்கங்களை விளக் கும் வகையில் புதன் மறைபோதகம் வழங்கினார்.
   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங் கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு நாளின் முந்தைய நாள் இன்று. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் காலத்தில், ஆயர்கள் மட்டு மல்ல, அகில உலகத் திருச்சபையும் கொண்டிருந்த ஆர்வம், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை நான் நினைவில் கொண்டுள்ளேன். நாளை நாம் 'விசுவாச ஆண்டை' தொடங்க உள்ள இவ்வேளையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஏடு களுக்கு நாம் திரும்பிச் செல்லவேண்டிய அவசியம் எக்காலத்தையும்விட தற்போது அதிகமாக உள்ளது. இப்பொதுச்சங்கத்தைக் கூட்டிய அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், விசுவாச உண்மைகளின் மூலத்திற்கு எப்போதுமே சிதைவு வராமல், அவ்வுண்மைகளைப் புதுப்பிக்கப்பட்ட வழிகளில் அறிவிப்பதற்கே பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்து நம்மை வாழ்வை நோக்கி வழிநடத்திச் செல்லும் இயேசுவுடன் தனிப்பட்ட மற்றும் குழுவான சந்திப்பிலும், மூவொரு கடவுளிலான விசுவாசத்திலும், கிறிஸ் தவம் அடங்கியுள்ளது என்ற பொதுச்சங்கத்தின் ஆழமான செய்தியை, இறைவனை மறந்து வாழும் நம் காலத்தின் இத்தலைமுறையினருக்கு நினைவூட்ட வேண்டிய தேவை உள்ளது. இதிலிருந்தே அனைத்தும் தொடர்கின்றன. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க காலத்தைப் போலவே இப்போதும் நாம் சிலவற்றைத் தெளிவாக ஏற்றுக் கொள்வோம். அதாவது, கடவுள் நம்மிடையே உள்ளார், அவர் நம்மை கண்காணித்து வருகிறார், அவர் நமக்குப் பதிலுரை வழங்குகிறார், மனிதர் கடவுளை மறக்கும்போது அவர் தன் மனித மாண்புக்கு இன்றியமையாமல் இருக்க வேண்டிய ஒன்றையே மறந்து விடுகிறார் என்பவைகளைத் தெளிவுடன் ஏற்போம். நம்மை மீட்டு முடிவற்ற பேறுபெற்ற நிலைக்கு வழிநடத்திச் செல்லும் இறை அன்பு எனும் செய்தியை தன் அங்கத்தினர்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கும் பணியை திரு
ச்சபை கொண்டுள் ளது என்பதை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இந்த 50ம் ஆண்டு நிறைவு நமக்கு நினைவுபடுத்தி நிற்கின்றது.
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, புதன் பொது மறைபோதகங்களின்போது அரபு மொழியிலும் வாழ்த்துக்களை வெளியிடுவதை ஆரம்பித்து வைத்தார். இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 8, 2012

அக்டோபர் 8, 2012

கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதற்கு
திருச்சபை சான்று பகர முடியும் - திருத்தந்தை

   இத்திங்களன்று வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அறையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமை யில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வு திருப்புகழ்மாலை செபத்துடன் தொடங்கி யது. அந்த நேரத்தில் திருத்தந்தை தனது சிந்தனை களைப் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார் .
   இரண்டாயிரம் ஆண்டுகள் நற்செய்தியை அறி வித்த பின்னரும் கடவுள் யார், அவர் மனித சமு தாயத்தோடு என்ன செய்கிறார் என்கின்ற பெரிய கேள்வி எப்போதும் பலரின் இதயங்களில் இருக் கின்றது. கடவுள் நமக்காக என்ன செய்துள்ளார் என்பதை திருச்சபை அறியச் செய்ய முடியும், திருச்சபை கடவுள் பற்றிப் பேச முடியும். நற்செய்தியை அறிவிப்பதற்கு கடவுளின் அக்கினியை உள்ளத்தில் கொண்டிருந்து அதை உலகில் துணிச்சலுடன் ஏற்றி வைக்க வேண்டும். கடவுள் திருச்சபையில் செயலாற்றுகிறார் என்பதை நற் செய்தி அறிவிப்பாளர்கள் தங்கள் இதயத்தில் அறிந்திருக்க வேண்டும், கிறிஸ்துவை உலகுக்கு அறிவிப்பதற்குப் பற்றி எரியும் ஆவலைக் கொண்டிருக்க வேண்டும்.
   கடவுள் மட்டுமே தமது திருச்சபையை உருவாக்க முடியும், கடவுள் செயல்பட வில்லையெனில் நமது செயல்கள் நமது காரியங்களாக மட்டுமே இருக்கும், கடவுள் பேசினார், அவர் பேசுகிறார், அவர் நம்மை அறிந்திருக்கிறார், அவர் நம்மை அன்பு செய்கிறார் என்பதற்குத் திருச்சபை சான்று பகர முடியும். நற்செய்தி என்பது கடவுள் தமது மௌனத்தைக் கலைத்துள்ளார் என்று அர்த்தமாகும். இந்த உலக ஆயர்கள் மாமன்றம் ஒவ்வொரு நாளும் செபத்தோடு தொடங்குகிறது என்றால் எந்த முயற் சியும் எப்போதும் கடவுளின் செயலாக இருக்கின்றது, எனவே நாம் கடவுளோடு ஒத்துழைக்க வேண்டும்.
   இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் சென்னை - மயிலைப் பேராயர் சின்னப்பா உட்பட 262 மாமன்றத் தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். வல்லுனர்கள், பார்வை யாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என மொத்தம் 408 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

Sunday, October 7, 2012

அக்டோபர் 7, 2012

தாராள மனதோடு மறைபணி ஆற்றியவர்கள் நடுவில்
இருந்து புனிதர்கள் மலர்கிறார்கள் - திருத்தந்தை

   வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று 13வது ஆயர்கள் மாமன்றத் தந்தையரோடு திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்ஜென் புனித ஹில்டெகார்டு, அவிலா புனித ஜான் ஆகிய இருவரையும் திருமறையின் மறைவல்லுனர்கள் என இஞ்ஞாயிறன்று அறிவித்தார். இவர்களுடன் சேர்த்து கத்தோலிக்கத் திருச்சபையில் மறைவல்லுனர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
   நற்செய்திப்பணியில் புனிதர்கள் உண்மையான செயல்பாட்டாளர்கள், இவர்கள் தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால் புதிய நற்செய்திப்பணிக்கு முன்னோடிகளாய் இருக்கின்றார்கள். புனித வாழ்வு என்பது கலாச்சார, சமூக, அரசியல் அல்லது சமய எல்லைகளுக்கு உட்பட்டதல்ல. இப்புனித வாழ்வின் அன்பு மற்றும் உண்மையின் மொழி, நன்மனம் கொண்ட அனைவராலும் புரிந்துகொள்ளப்படுகின்றது, இது புதிய வாழ்வின் தளராத ஊற்றாகிய இயேசு கிறிஸ்துவிடம் அவர்களை இட்டுச்செல்கிறது. கடந்த காலத்தின் மறைபோதகத் தளங்களிலும், தற்போது கிறிஸ்தவர் அல்லாதவர்கள் வாழும் இடங்களிலும் தாராள உள்ளத்தோடு மறைப்பணி ஆற்றியவர்கள் நடுவிலிருந்து புனிதர்கள் மலர்கிறார்கள். பெனடிக்ட் சபைத் துறவியாகிய பின்ஜென் புனித ஹில்டெகார்டு (1098-1179), ஓர் அறிவுக்களஞ்சியம். இவர் ஓர் இறைவாக்கினர், இசையமைப்பாளர், அறிவியலாளர், மெய்யியலாளர், இறையியலாளர், தியானயோகி, எழுத்தாளர், புனித பெர்னார்டின் நண்பர், கிறிஸ்து மற்றும் திருச்சபை மீது மிகுந்த பற்றுறுதியுடன் செயல்பட்டவர். அவிலா புனித ஜான்(1499-1569) அப்போஸ்தலிக்கப் பணியில் செபத்தை இணைத்தவர். போதிப்பதில் காலத்தைச் செலவழித்தவர். குருத்துவ மாணவர்களை உருவாக்கும் பயிற்சியை மேம்படுத்தியவர்.

   13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை தொடங்கி வைத்த திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, செபமாலை அன்னை திருவிழா தொடர்பான கருத்தினை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருச்செபமாலையின் அரசியாக இன்று நாம் சிறப்பிக்கும் அன்னை மரியாவிடம் நம் செபங்களித் திருப்புவோம். இந்த தருணத்தில் உலகெங்கும் இருந்து வரும் எண்ணற்ற மக்கள் பாரம்பரியமாக பொம்பைத் திருத்தலத்தில் கூடி அன்னையிடம் செபிக்கின்றனர். இச்செபத்தோடு நாமும் நம்மை ஆன்மீக ரீதியில் ஒன்றிணைப்போம். தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டில் செபமாலை பக்தியை ஒவ்வொருவரும் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். செபமாலை மூலம், விசுவாசத்தின் மாதிரியான மரியா நம்மை வழிநடத்த அனுமதிப்போம். செபமாலையில் கிறிஸ்துவின் மறையுண்மைகளைத் தியானிப்பதன் மூலம் நாளுக்கு நாள் நாம் நற்செய்தியை உள்வாங்கிக் கொள்வதால், அது நம் அனைவருடைய வாழ்வையும் வடிவமைக்கிறது. எனது முன்னோடிகளின் வழியில், தனியாகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் செபமாலை செபிக்க அழைக்கிறேன். அன்னை மரியாவின் பள்ளியில் (திருச்செபமாலையில்) பயில்வது, விசுவாச வாழ்வின் மையமான கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்கிறது.
   இன்று தொடங்கியுள்ள புதிய நற்செய்திப்பணி குறித்த ஆயர்கள் மாமன்றத்துக்காக செபிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டாம் வத்திக்கான் தொடங்கியதன் ஐம்பதாம் ஆண்டு நினைவாக, இந்த வாரத்தில் விசுவாச ஆண்டு தொடங்குகிறது. நமது திருச்சபை வழியாக நம்மிடம் வருகிற இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் அழகையும் மகிழ்ச்சியையும் இந்த நிகழ்வுகள் நமக்கு உறுதி செய்வதாக! இந்த விண்ணப்பங்களை நம் செபமாலை அன்னையிடம் ஒப்படைப்போம், கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வாதிக்க நான் வேண்டுகிறேன்.

Friday, October 5, 2012

அக்டோபர் 4, 2012

 நாம் கடவுளிடம் திரும்பிவர வேண்டும் - திருத்தந்தை

   இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கு இவ்வியாழனன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிறைவேற்றிய திருப்பலியில் பின் வருமாறு மறையுரை ஆற்றினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   1962ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதியன்று அருளா ளர் திருத்தந்தை 23ம் ஜான் இந்த லொரேத்தோ திருத்தலத்துக்கு வந்த போது இரண்டாம் வத்திக் கான் பொதுச்சங்கத்தில் கலந்து கொள்ளவிருந்த அனைவருக்காகவும் அன்னை மரியாவிடம் செபித்தார். கிறிஸ்துவின் மீதும் ஆன் மாக்களின் மீதும் கொண்டிருந்த அன்புத் துடிப்புடன் ஒரே இதயம் கொண்டவர்களாய் திருத்தூதர்களும் இயேசுவின் முதல் சீடர்களும் எருசலேம் மாடியறையில் நுழைந் தது போன்று புனித பேதுரு பசிலிக்கா மாமன்ற அறையில் நுழையும் 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத் தந்தையர்களுக்கு அருளைப் பொழியுமாறு அன்னையிடம் வேண்டி னார். இது நடந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து, திருச்சபை இரண்டு முக்கிய நிகழ்வு களை அன்னையிடம் அர்ப்பணிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.
   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ஆம் ஆண்டு நிறைவாக இந்த அக்டோபர் 11ந்தேதி தொடங்கும் விசுவாச ஆண்டையும், கிறிஸ்தவ விசுவா சத்தை பரப்புவதற்கான புதிய நற்செய்திப் பணி என்ற தலைப்பில் தொடங்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தையும் அன்னையிடம் அர்ப்பணிக்கின்றேன். விசுவசித்ததால் பேறுபெற்றவர் என அழைக்கப்பட்ட மரியாவின் பள்ளியில் பயிலும் வாய்ப்பை இந்த லொரேத்தோவில் பெறுகிறோம். அன்னையின் இவ்வுலக வீட்டைச் சுற்றிக் கட்டப் பட்டுள்ள இந்த பசிலிக்கா, இயேசுவின் பிறப்பு அவருக்கு அறிவிக்கப்பட்ட தருணத் தின் நினைவுகளைக் கொண்டிருக்கின்றது. இறைவன் மனிதஉரு எடுத்தது மற்றும் அவரது மீட்பின் சிறந்த தாக்கங்களை பரந்துபட்ட அளவில் பறைசாற்றும் நோக் கத்தை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கொண்டுள்ளது என்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த லொரேத்தோவில் அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் உறுதிப்படுத்தினார். விண்ணகமும் மண்ணகமும் ஒன்றிணைந்த இறைவனின் மனி தாவதாரப் பேருண்மையைச் சிந்திக்க அழைத்தார். இந்த அழைப்பானது இக்காலத் துக்குச் சிறப்பான விதத்தில் ஒலிக்கின்றது.
   இக்காலத்திய நெருக்கடி, பொருளாதாரத்தை மட்டுமல்ல, சமுதாயத்தின் பல துறைகளையும் பாதித்துள்ளது. மனிதர் கடவுளுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதையும், மனிதர்க்குக் கடவுள் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் இறை மகனின் மனித அவதாரம் நம்மிடம் பேசுகின்றது. கடவுள் இல்லாத வாழ்க்கையில் மனிதர், ஒருமைப்பாட்டையும் அன்பையும்விட தன்னலத்தையும், விழுமியங்களை விட பொருட்களையும் தேர்ந்தெடுக்கின்றனர். நாம் கடவுளிடம் திரும்பிவர வேண் டும். அப்போது மனிதர், மனிதராக இருக்கும் நிலைக்குத் திரும்புவார்கள். கடவு ளோடு வாழும்பொழுது, கஷ்டமான மற்றும் நெருக்கடியான நேரங்களிலும் எப்போ தும் நம்பிக்கையின் விளிம்பு தெரியும். நாம் ஒருபோதும் தனியாக இல்லை. கடவுள் மனித சமுதாயத்திடம் வந்து அவர்களோடு உடனிருக்கிறார் என்பதை கிறிஸ்துவின் மனித அவதாரம் நம்மிடம் கூறுகிறது.
   இறைமகன் உயிருள்ள வீடான மரியாவில் வாழ்ந்தது மற்றுமொரு சிந்தனையை நம்க்குத் தெரிவிக்கின்றது. கடவுள் வாழுமிடத்தை எல்லாரும் வீடுபோல் உணர் வோம். கிறிஸ்து எங்கெங்கு வாழ்கிறாரோ, அங்கெல்லாம் அவருடைய சகோதர சகோதரிகள் அந்நியர்களாக இருக்கமாட்டார்கள். கிறிஸ்துவின் தாயான மரியா நமக்கும் தாய். அத்தாய் தமது வீட்டை நமக்குத் திறந்து வைக்கிறார். அத்தாய் தமது திருமகனின் விருப்பத்தில் நாம் நுழைவதற்கு உதவுகிறார். எனவே விசுவாசமே இவ்வுலகில் ஒரு வீட்டை நமக்கு அளிக்கிறது. விசுவாசமே, நாம் அனைவரும் சகோ தர சகோதரிகளாக ஒரே குடும்பத்தில் நம்மை ஒன்று சேர்க்கின்றது.
   எனவே மரியா பற்றி நாம் தியானிக்கும்போது, ஆண்டவருக்கு நம்மைத் திறந்த வர்களாக, நமது வாழ்வை அவர் வாழும் இடமாக வழங்குவதற்கு விரும்புகிறோமா? அல்லது கடவுளின் பிரசன்னம் நமது சுதந்திரத்தை ஏதாவது ஒருவகையில் கட்டுப்படுத்தும் எனப் பயப்படுகிறோமா?, நமது வாழ்வின் ஒரு பகுதியை நமக்கென வைத்துக் கொள்கிறோமா? என நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அதி காரம், ஆதிக்கம், தன்வயப்படுத்தும் ஆசை ஆகியவை மீதான தாகத்திலிருந்தும், ஒருவர் தனக்குள்ளே முடங்கிக் கிடப்பதிலிருந்தும் உண்மையிலேயே விடுதலை அளிக்கிறவர் கடவுளே. தன்னையே வழங்குவதற்கும் அன்பு வாழ்வுக்கும் நம்மை நிறைப்பவர் கடவுள். இதன்மூலம் அவர் நம்மை பகிர்வுக்கும் சேவைமனப்பான்மைக் கும் மாற்றுகிறார். எனவே விசுவாசம் நம்மில் குடிகொள்ளட்டும். லொரேத்தோ புனித வீடு இந்தக் கூற்றில் ஒரு முக்கியமான போதனையையக் கொண்டுள்ளது.
   மேலும், இறைவார்த்தை மனிதஉரு எடுப்பதற்கு மரியாவிடம் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் மற்றுமொரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்கிறோம். மனித சமுதாயத்தின் ஆகட்டும் என்ற சொல்லைக் கடவுள் கேட்கிறார். இதனை நாம் முழு சுதந்திரத்துடன் சொல்வதற்கு நம்மைக் கேட்கிறார். இறையருள் நமது சுதந்திரத்தை அகற்றிவிடாது. மாறாக அது நம்மைப் படைத்து பாதுகாக்கிறது.

Wednesday, October 3, 2012

அக்டோபர் 3, 2012

திருவழிபாட்டிலேயே இறைவன் நம்மை நோக்கி
வந்து நம் வாழ்வில் நுழைகிறார் - திருத்தந்தை

   காஸ்தல் கந்தல்போவிலிருந்து வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்திற்கு வந்து புதன் பொது மறை போதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாரமும் செபம் குறித்த தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார்.
   திருவழிபாட்டுச் செபம் குறித்த திருச்சபையின் இயல்புநிலை குறித்து இன்று நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். திருவழிபாடு என்பது தூய ஆவியில் தந்தையாம் இறைவனை நோக்கி இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய செபத்தில் பங்குபெறுவ தாகும். இயேசுவில் ஒன்றிணைந்திருக்கும் அவ ரின் மறையுடலாம் திருச்சபை, தந்தையாம் இறைவனுக்கு தன் வழிபாட்டை செலுத் துகிறது. தந்தைக்கான இயேசுவின் செபத்தில் நம்மை நாம் அடையாளம் கண்டு கொள்ளும்போது, வானகத்தில் இருக்கிற தந்தையாம் இறைவனின் குழந்தைகளாக, கிறிஸ்தவர்களாக இருப்பதன் ஆழமான தன்மையை நாம் மீண்டும் கண்டுகொள் கிறோம்.
   திருவழிபாடு என்பது இயேசுவை முழுமையாக, முகம் முகமாக எதிர்கொள்வதும், அவரோடும் அவரின் மறையுடலாம் திருச்சபையோடும் ஒன்றித்திருப்பதும் ஆகும். இவ்வாறு, திருவழிபாடு என்பது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட, உயி ருள்ள அனைத்துலகச் சமூகத்தில் பங்குபெறுவதாகும். திருச்சபையில், திருச்சபை வழியாக திருச்சபையின் வார்த்தைகளை நம்முடையதாக மாற்றி நாம் உரையாடக் கற்றுக்கொள்ளும்போது, இறைவனின் உடனிருப்பை முழுமையாக உணர்ந்துகொள் ளும் நிலையாக செபம் மாறுகிறது.
   திருவழிபாட்டில் திருச்சபை, தன்னிலையில் உண்மைத்தன்மையுடையதாக இருக் கிறது. ஏனெனில், திருவழிபாட்டிலேயே இறைவன் நம்மை நோக்கி வந்து நம் வாழ் வில் நுழைகிறார். திருவழிபாடு என்பது நமக்காக அல்ல, மாறாக இறைவ னுக்காக கொண்டாடப்படும் ஒன்று என்பதை மனதில் நிறுத்துவோம். இது அவரின் செயல் பாடு, அவரே அதன் முக்கியக் கருப்பொருள். திருவழிபாட்டில் நம் பங்கு என்னவெ னில், கிறிஸ்துவாலும் அவரின் மறையுடலாம் திருச்சபையோடும் நாம் வழிநடத்தப் படும் வகையில் நம்மையேத் திறந்தவர்களாகச் செயல்படுவதாகும்.
   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் திறக்கப்படுவதற்கும் ஒரு வாரத்திற்கு முன் னால் மரியன்னை திருத்தலம் இருக்கும் லொரெத்தோவிற்கு அருளாளர் திருத் தந்தை 23ம் அருளப்பர் திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டை நினைவு கூரும் விதமாக நாளை (4ந்தேதி) அதே இடத்திற்கான என் திருப்பயணத்தை மேற்கொள்கின்றேன். அன்னை மரியாவின் பரிந்துரையை நோக்கிய என் செபத்தில் என்னோடு இணைந்திருக்குமாறு உங்களை நான் வேண்டுகிறேன். புதிய நற்செய்தி அறிவித்தல் குறித்த ஆயர் மாமன்றமும், விசுவாச ஆண்டும் தொடங்க உள்ளன. நம் காலத்தின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்செய்தியை எடுத்துரைக்கும் திருச் சபையின் பணியில் அன்னை மரியா உடன் வந்து உதவுவாராக!
   இவ்வாறு, தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.