தாராள மனதோடு மறைபணி ஆற்றியவர்கள் நடுவில்
இருந்து புனிதர்கள் மலர்கிறார்கள் - திருத்தந்தை
இருந்து புனிதர்கள் மலர்கிறார்கள் - திருத்தந்தை
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று 13வது ஆயர்கள் மாமன்றத் தந்தையரோடு திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்ஜென் புனித ஹில்டெகார்டு, அவிலா புனித ஜான் ஆகிய இருவரையும் திருமறையின் மறைவல்லுனர்கள் என இஞ்ஞாயிறன்று அறிவித்தார். இவர்களுடன் சேர்த்து கத்தோலிக்கத் திருச்சபையில் மறைவல்லுனர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
நற்செய்திப்பணியில் புனிதர்கள் உண்மையான செயல்பாட்டாளர்கள், இவர்கள் தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால் புதிய நற்செய்திப்பணிக்கு முன்னோடிகளாய் இருக்கின்றார்கள். புனித வாழ்வு என்பது கலாச்சார, சமூக, அரசியல் அல்லது சமய எல்லைகளுக்கு உட்பட்டதல்ல. இப்புனித வாழ்வின் அன்பு மற்றும் உண்மையின் மொழி, நன்மனம் கொண்ட அனைவராலும் புரிந்துகொள்ளப்படுகின்றது, இது புதிய வாழ்வின் தளராத ஊற்றாகிய இயேசு கிறிஸ்துவிடம் அவர்களை இட்டுச்செல்கிறது. கடந்த காலத்தின் மறைபோதகத் தளங்களிலும், தற்போது கிறிஸ்தவர் அல்லாதவர்கள் வாழும் இடங்களிலும் தாராள உள்ளத்தோடு மறைப்பணி ஆற்றியவர்கள் நடுவிலிருந்து புனிதர்கள் மலர்கிறார்கள். பெனடிக்ட் சபைத் துறவியாகிய பின்ஜென் புனித ஹில்டெகார்டு (1098-1179), ஓர் அறிவுக்களஞ்சியம். இவர் ஓர் இறைவாக்கினர், இசையமைப்பாளர், அறிவியலாளர், மெய்யியலாளர், இறையியலாளர், தியானயோகி, எழுத்தாளர், புனித பெர்னார்டின் நண்பர், கிறிஸ்து மற்றும் திருச்சபை மீது மிகுந்த பற்றுறுதியுடன் செயல்பட்டவர். அவிலா புனித ஜான்(1499-1569) அப்போஸ்தலிக்கப் பணியில் செபத்தை இணைத்தவர். போதிப்பதில் காலத்தைச் செலவழித்தவர். குருத்துவ மாணவர்களை உருவாக்கும் பயிற்சியை மேம்படுத்தியவர்.
13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை தொடங்கி வைத்த திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, செபமாலை அன்னை திருவிழா தொடர்பான கருத்தினை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
திருச்செபமாலையின் அரசியாக இன்று நாம் சிறப்பிக்கும் அன்னை மரியாவிடம் நம் செபங்களித் திருப்புவோம். இந்த தருணத்தில் உலகெங்கும் இருந்து வரும் எண்ணற்ற மக்கள் பாரம்பரியமாக பொம்பைத் திருத்தலத்தில் கூடி அன்னையிடம் செபிக்கின்றனர். இச்செபத்தோடு நாமும் நம்மை ஆன்மீக ரீதியில் ஒன்றிணைப்போம். தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டில் செபமாலை பக்தியை ஒவ்வொருவரும் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். செபமாலை மூலம், விசுவாசத்தின் மாதிரியான மரியா நம்மை வழிநடத்த அனுமதிப்போம். செபமாலையில் கிறிஸ்துவின் மறையுண்மைகளைத் தியானிப்பதன் மூலம் நாளுக்கு நாள் நாம் நற்செய்தியை உள்வாங்கிக் கொள்வதால், அது நம் அனைவருடைய வாழ்வையும் வடிவமைக்கிறது. எனது முன்னோடிகளின் வழியில், தனியாகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் செபமாலை செபிக்க அழைக்கிறேன். அன்னை மரியாவின் பள்ளியில் (திருச்செபமாலையில்) பயில்வது, விசுவாச வாழ்வின் மையமான கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்கிறது.
இன்று தொடங்கியுள்ள புதிய நற்செய்திப்பணி குறித்த ஆயர்கள் மாமன்றத்துக்காக செபிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டாம் வத்திக்கான் தொடங்கியதன் ஐம்பதாம் ஆண்டு நினைவாக, இந்த வாரத்தில் விசுவாச ஆண்டு தொடங்குகிறது. நமது திருச்சபை வழியாக நம்மிடம் வருகிற இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் அழகையும் மகிழ்ச்சியையும் இந்த நிகழ்வுகள் நமக்கு உறுதி செய்வதாக! இந்த விண்ணப்பங்களை நம் செபமாலை அன்னையிடம் ஒப்படைப்போம், கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வாதிக்க நான் வேண்டுகிறேன்.