உலகிலேயே மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தின் ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்தார் திருத்தந்தை
இப்புதன் மாலை 6 மணியளவில் இத்தாலியின் குபியோ நகரின் இங்கினோ மலைச்சரிவில் அலங்கரிக்கப்பட்டிருந்த உலகிலேயே மிக உயர மான கிறிஸ்மஸ் மரத்தின் ஒளிவிளக்குகளை வத்திக்கானில் உள்ள திருத்தந்தையின் இல்லத் தில் இருந்தபடியே கையடக்கமான கணினியின் துணை கொண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஏற்றிவைத்தார்.
அப்போது உரையாற்றிய திருத்தந்தை, மண்ணகக் கவலைகளில் சூழப்பட்டிருக்கும் நாம், விண்ணகத்தை நோக்கிப் பார்க்க வேண்டும் என்பதை, மண்ணில் நடப்பட்டாலும், விண்ணை நோக்கி வளரும் ஒவ்வொரு மரமும் நமக்குச் சொல்லித் தருகிறதென்றும், இந்த மலைச்சரிவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மரத்தின் ஒளி குபியோ நகரை ஒளிர்விப்பதுபோல், இருள் சூழ்ந்த உலகை ஒளிமயமாக்க கிறிஸ்துமஸ் இரவில் ஒளியொன்று இவ்வுலகில் தோன்றியது என்றும் கூறினார்.
கவலைகள் என்ற இருளில் மூழ்கியுள்ள நமக்கு மிக நெருக்கமாக வந்து நம்மை ஒளிக்கு அழைத்துச் செல்வதற்காகவே இறைவன் குழந்தை வடிவில் நம் மத்தியில் வந்தார் என்றும், இக்குழந்தை தன்னை நம் ஒவ் வொருவர் இல்லத்திலும், வாழ்விலும் ஏற்றுக் கொள்ளும்படி நம்மை கேட்கிறார் என்றும், அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரத்தில் பல வண்ண விளக்குகள் இருப்பதுபோல், நாம் ஒவ்வொருவரும் ஒளி விளக்காக மாறும்படியும், ஒருவரோடு ஒருவர் இணைந்து இந்த உலகை ஒளிர்விக்கும்படியும் அழைக்கப்பட்டுள்ளோம் என் றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.