Friday, December 9, 2011

டிசம்பர் 8, 2011

அன்னை மரியாவை ஒரு அருள் வடிகாலாக
இறைவன் தேர்ந்தெடுத்திருக்கிறார் - திருத்தந்தை

   இவ்வியாழனன்று (டிசம்பர் 8) கொண்டாடப் பட்ட அன்னை மரியாவின் அமல உற்பவ திரு நாளையொட்டி சிறப்பு மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாவத் தால் மனித குலம் இழந்த பல நன்மைகளை தன் மகன் வழியாக இறைவன் மீண்டும் தருவதற்கு விழைந்ததாலேயே, ஒரு அருள் வடிகாலாக மரியாவைத் தேர்ந்தெடுத்தார் என்றும், அருள் நிறைந்தவரே வாழ்க என்று அன்னை மரியாவை வாழ்த்தும்போதெல்லாம், அருள் வடிவான இறைவனை நமக்கு வழங்கியவர் அவர் என்பதை நாம் நினைவு கூர்கிறோம் என்று கூறினார்.
   அமல அன்னைப் பெருவிழா உருவானதற்குக் காரணமாயிருந்த திருத்தந்தை 11ம் பத்திநாதர், மற்றும் அன்னையின் அமல உற்பவம் குறித்து இறையியல் ஆக்கங் களை தந்துள்ள பல புனிதர்கள் ஆகியோரின் எண்ணங்களை தன் உரையில் மேற் கோள்களாகக் காட்டிப் பேசினார் திருத்தந்தை. திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் அனைவரும் அன்னை மரியாவைப் போல் இறைவனை நமது வாழ்வில் முழுமையாக வரவேற்கக் காத்திருப்போம் என்று கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   தன் மூவேளை செப உரையின் இறுதியில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஸ்பானியம், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் அன்னை மரியாவின் பெருவிழா வாழ்த்துக்களைக் கூறிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த அமல மரியா பாப்பிறைக் கழகத்தின் உறுப்பினர் களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.


   இவ்வியாழன் மாலை, “மரியா, அமல உற்பவி” என்ற விசுவாச சத்தியம், திருத்தந்தை 9ம் பத்தி நாதரால் 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிரக டனப்படுத்தப்பட்டதை நினைவு கூரும் விதமாக உரோம் இஸ்பானிய படிகளின் அருகில் அமைக்கப் பட்டுள்ள அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக கூடியிருந்த விசுவாசிகளோடு இணைந்து செபித்த திருத்தந்தை பின்வருமாறு உரையாற்றினார்:
  திருச்சபை தனது வரலாறு முழுவதும் அடக்கு முறைகளால் துன்புற்று வருகின்ற போதிலும் அது எப்பொழுதும் இறைவனின் ஒளியாலும் பலத்தாலும் ஆதரவடைந்து வருகின்றது. எனினும் திருச்சபை எதிர் கொள்ளும் ஒரே ஆபத்து அதன் உறுப் பினர்கள் செய்யும் பாவமே; திருச்சபை தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டும்.
   அன்னை மரியா, பாவக்கறையின்றி இருந்தார், திருச்சபையும் தூயது, ஆயினும் அது நம் பாவங்களால் கறைப்பட்டுள்ளது. இதனாலே கிறிஸ்தவர்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் போது, அன்னை மரியாவின் உதவியை நாடுகின்றனர். நமக்கு உண்மையிலே தேவைப்படும், குறிப்பாக மிகுந்த இன்னல்களை எதிர்நோக்கும் இத்தாலி, ஐரோப்பா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவைப்படும் நம்பிக்கையை அன்னை மரியா கொடுக்கிறார்.
   “பெண், கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார், நிலா அவருடைய காலடியில் இருந்தது, அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்” என்ற திரு வெளிப்பாட்டு வசனங்களை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, இந்தப் பெண் மரியாவே என்றும், இவர் முழுமையும் இறைவனின் ஒளியால் சூழப்பட்டு இறைவனில் வாழ்ந்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.
   அமலோற்பவ அன்னை விழாவாகிய இவ்வியாழனன்று அன்னை மரியாவிடம் செபித்து அவருக்கு வெள்ளைநிற ரோஜா மலர்களையும் சமர்ப்பித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.