Wednesday, December 7, 2011

டிசம்பர் 7, 2011

இயேசுவே நம் செபத்திற்கு எடுத்துக்காட்டும்
ஆதாரமுமாக இருக்கிறார் - திருத்தந்தை

   இத்தாலியின் உரோம் நகரில் திருத்தந்தையின் புதன் மறைபோதகத்தில் பங்கு பெற வந்த திருப் பயணிகளை, திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக் கல்விப் போதனையில், இயேசுவின் படிப்பினை கள் மற்றும் எடுத்துக்காட்டுக்கள் குறித்து அண்மை புதன் கிழமைகளில் நோக்கி வருகிறோம் எனத் தன் இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை.
   இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' எனக் கூறிய வார்த்தைகளை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வாசிக்கின்றோம். தூய ஆவியில் தந்தையுடன் ஆழ்ந்த ஐக்கியத்தில் தன் மூலத்தைக் கொண்டுள்ளது இந்த உன்னதச் செபம். என்றும் நிலைத்திருக்கும் மகனாக இருக்கும் இயேசு கிறிஸ்து ஒருவரே தந்தையை அறிவார், தந்தையின் விருப்பத்திற்குத் தன்னை முற்றிலும் திறப்பதில் பேருவகை அடைகிறார். மேலும், 'தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்.' தூய மனதுடையோராகவும் இறை விருப்பத்திற்குத் தங்களைத் திறந்தவர்களாகவும் இருக்கும் குழந்தைகளுடன் இறைவன் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்ளும் தன் விருப்பத்தை இச்செபத்தில் வெளிப்படுத்துகிறார் இயேசு. 
   தந்தையைப் புகழ்ந்து பாடும் வார்த்தைகளைத் தொடர்ந்து இயேசு 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது' என அழைப்பு விடுப்பதை மத்தேயு நற்செய்தியில் வாசிக்கின்றோம். இயேசுவே நம் செபத்திற்கு எடுத்துக்காட்டும் ஆதாரமும். அவர் வழியாக தூய ஆவியில் நாம் நம்பிக்கையுடன் தந்தையாம் இறைவனை நோக்கித் திரும்ப முடியும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழி நாம் உண்மையான விடுதலையையும் அமைதியையும் கண்டுகொள்ள முடியும் என்ற உறுதியுடன் அவரை நோக்கித் திரும்புவோம். 
   இவ்வாறு தன் இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய பாப்பிறை, 1943ம் ஆண்டு வான்குண்டுவீச்சு மூலம் தகர்க்கப்பட்ட இத்தாலியின் மத்தியப் பகுதியில் உள்ள செக்கானோ என்ற ஊரின் புனித பேதுரு பங்குக் கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதன் 50 ஆண்டு நிறைவையும், தென்னாப்ரிக்காவில் மறை போதக குரு மிச்சேல் டி’அன்னுசி கொடூரமான முறையில் கொல்லப்பட்டதன் 10ம் ஆண்டு நிறைவையும் நினைவு கூர்ந்தார். மறைபோதகத்தின் இறுதியில் அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.