Thursday, January 26, 2012

ஜனவரி 25, 2012

கிறிஸ்தவ ஒன்றிப்பை அடைவதற்கான நமது
உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம் - திருத்தந்தை

   45வது கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தை நிறைவுசெய்த மாலை திருவழிபாட்டில் இப்புதன் மறையுரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நிலவும் பிரி வினைகளின் வேதனையை இந்நாட்களில் அனுப விக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குவோம் எனவும், கடவு ளின் விருப்பமான கிறிஸ்தவ ஒன்றிப்பைத் துணி வோடும் தாராள உள்ளத்தோடும் அடைவதற்கு, நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம் என்றும் கூறினார்.
   கிறிஸ்துவின் வெற்றி என்பது, கிறிஸ்துவோடும் பிறரோடும் நாம் வாழ்வின் நிறைவைப் பகிர்ந்து கொள்வதைத் தடுக்கும் அனைத்தையும் மேற்கொள்வதாகும் என்று கூறிய திருத்தந்தை, "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றியால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம்” (1கொரி.15.51-58) என்ற இச்செபவாரத்தின் கருப்பொருள் பற்றியும் பேசினார்.
   ஆதித்திருச்சபையைத் துன்புறுத்திய சவுல், இயேசுவின் நற்செய்தியின் அயராத திருத்தூதரான இந்தப் புதிரான மாற்றம், நீண்ட காலம் சிந்தித்ததன் பயனாகவோ, சொந்த முயற்சியின் பயனாகவோ இடம் பெறவில்லை, மாறாக, தமது மறை பொருளான வழிகளில் செயல்படும் கடவுளின் திருவருளால் நிகழ்ந்தது என்றும், நாமும், நமது செபத்தால் கிறிஸ்துவின் சாயலாக மாற முடியும், இது சிறப்பாக, கிறிஸ்தவ ஒன்றிப்பில் உண்மையாகின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
   உரோம் புனித பவுல் பசிலிக்காவில் இடம் பெற்ற இம்மாலைத் திருவழிபாட்டில், கான்டர்பரி பேராயரின் உரோம் பிரதிநிதி, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலை வர் ரிச்சர்டுசன், போலந்து கிறிஸ்தவ சபைக் குழுக்கள், இன்னும் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.