Sunday, February 26, 2012

பிப்ரவரி 26, 2012

தவக்காலம் கடவுளுடனான நமது உறவைப்
புதுப்பித்து பலப்படுத்தும் காலம் - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் இஞ்ஞாயிறு மதியம் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வரும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
   தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று, திரு முழுக்கு யோவானிடமிருந்து யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்ற பின்பு இயேசு பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டதை பார்க்கிறோம். மத்தேயு, லூக்கா நற்செய்திகளைப் போலன்றி, மாற்கு நற்செய்தி யில் இது சுருக்கமாக காணப்படுகிறது. நாம் பேசும் பாலைநிலம் என்பது வெவ்வேறு அர்த்தங்களை கொண்டது. இது கைவிடப்பட்ட, தனிமையான நிலையை, சோதனை பலம் பெறுகின்ற எந்த ஆதரவும் நிச்சயமும் இல்லாத மனிதனின் பலவீனமான இடத்தைச்  சுட்டிக்காட்டுகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் இருந்து தப்பிய பிறகு, அடைக்கலமாகவும் உறைவிடமாகவும் கொண்ட பாலைநிலத்தையும் இது குறிக்கி றது; அங்கே நாம் இறைவனின் பிரசன்னத்தை சிறப்பான வகையில் உணர்கிறோம். பாலை நிலத்தில் இயேசு நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப் பட்டார். புனித பெரிய லியோ பின்வருமாறு கூறுகிறார்: "ஆண்டவர் அவரது உதவியால் நம்மைப் பாதுகாக்கவும் தனது எடுத்துக்காட்டால் நமக்கு கற்பிக்கவும், சோதிப்பவனின் தாக்குதலை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டார்."
   இந்த பகுதி நமக்கு கற்பிப்பது என்ன? 'கிறிஸ்து வழி வாழ்வு' புத்தகத்தில் நாம் வாசிப்பது போல, "அவன் வாழும் காலமெல்லாம், எப்பொழுதுமே மனிதன் சோத னையில் இருந்து முழுமையாக விடுபடுவது இல்லை... ஆனால் பொறுமை மற்றும் உண்மையான தாழ்ச்சியோடு இருக்கும்போது, எந்த எதிரியை விடவும் பலமான வர்களாக நாம் மாற முடியும், பொறுமையும் தாழ்ச்சியும் ஒவ்வொரு நாளும் ஆண்டவரைப் பின்பற்றவே. அவருக்கு வெளியிலோ அல்லது அவரது இல்லாமை யிலோ அல்ல, அவரில் அவரோடு நம் வாழ்வைக் கட்டியெழுப்ப கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவரே உண்மை வாழ்வின் ஆதாரம். கடவுளை விலக்கவும், நம் வாழ்வையும் உலகையும் கைவசப்படுத்தவும், முழுமையாக நம் சொந்த திறமை களையே நம்பி இருக்கவும் மனித வரலாற்றில் சோதனை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது.
   "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது" என்று இயேசு அறிவித்தார். தன்னில் புதிதாக நிகழ்ந்த ஒன்றை அவர் அறிவிக்கிறார்; எதிர்பாராத வகையில் ஒரு தனிப்பட்ட நெருக்கத்துடனும், முழுமையான அன்புடனும் கடவுள் மனிதருடன் பேசுகிறார். பாவத்தை தன் மேல் ஏற்று, தீமையை வெற்றிகொள்ளவும், மனிதரை கடவுளின் உலகிற்கு திரும்பக் கொண்டு சேர்க்கவும் கடவுள் மனித உரு ஏற்று, மனிதரின் உலகில் நுழைகிறார். இந்த சிறந்த கொடைக்கான அறிவிப்புடன் ஒரு கோரிக்கையும் இணைந்திருந்தது. உண்மையில் இயேசு, "மனம் மாறி நற் செய்தியை நம்புங்கள்" என்றார். இது கடவுளில் நம்பிக்கை கொள்வதற்கும், அவரது விருப்பத்தின்படி நமது வாழ்வை மாற்றி அமைப்பதற்கும், நம் அனைத்து செயல் களையும் சிந்தனைகளையும் நன்மையின் பக்கம் திருப்புவதற்குமான அழைப்பாகும். தவக்காலம் என்பது அன்றாட செபம், தவ முயற்சிகள், சகோதரத்துவ பிறரன்பு பணி கள் ஆகியவற்றால் கடவுளுடனான நமது உறவை புதுப்பித்து பலப்படுத்தும் காலம்.
   நமது தவக்காலப் பயணத்தில் நம்மோடு இருந்து பாதுகாக்குமாறு தூய கன்னி மரியாவை ஆர்வமுடன் வேண்டிக்கொள்வோம். இயேசு கிறிஸ்துவின் வார்த்தை களை நம் உள்ளங்களிலும் வாழ்விலும் பதியச்செய்து, நம்மை அவரிடம் திருப்ப மரியா நமக்கு உதவி செய்வாராக! இன்று மாலை நான் ரோமன் கியூரியாவில் உள்ள எனது உடன்பணியார்களோடு தொடங்கும் ஆன்மீகப் பயிற்சி வாரத்துக்காக உங்கள் செபங்களை வேண்டுகிறேன். தவக்காலத்தின் இந்த தொடக்க நாட்களில் செபம், நோன்பு, தர்மம் ஆகியவற்றின் மூலம் இப்புனித காலத்தின் ஆர்வத்தைப் பெற்றுக்கொள்ள உங்களை அழைக்கிறேன். இதன் வழியாக ஆண்டவரின் துணை யோடு, இந்த தவக்காலத்தின் இறுதியில் சிலுவை மீதான அவரது வெற்றியை நாம் தகுதியுடன் கொண்டாட முடியும். கடவுள் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர் வதிப்பாராக!
   குறிப்பு: 'கடவுளுடனான கிறிஸ்தவரின் நட்புறவு' என்ற தலைப்பில் வருகின்ற ஏழு நாட்களும், திருத் தந்தையும் ரோமன் கியூரியாவின் கர்தினால்களும் மேற்கொள்ள இருக்கும் தவக்கால ஆன்மீகப் பயிற்சி களின் காரணமாக இவ்வாரம், புதன் பொது மறைபோதகம் இடம்பெறாது. 'தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்', 'நட்புறவும் வாழ்வும்', 'நட்புறவும் இரக்கமும்', 'பாவம், நட்புறவின் மீறல்', 'அன்பே கடவுள்', 'ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் மற்றும் செபம் - தூய ஆவி', மற்றும் 'அன்பும் விசுவாசமும்' என்ற வெவ்வேறு தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் இந்த ஒரு வார ஆன்மீகப் பயிற்சிகள் அமையும்.

Wednesday, February 22, 2012

பிப்ரவரி 22, 2012

இத்தவக்காலம் அகில உலக திருச்சபைக்கும்
அருளின் காலமாக அமையட்டும்  - திருத்தந்தை

   வாராந்திர பொது மறைபோதகத்துக்காக தவக் காலத்தின் முதல் நாளான இப்புதனன்று, திருப் பயணிகளை வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்த திருத்தந்தை தவக் காலத் தயாரிப்புகள் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.
   கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய தவக்காலப் பயணத்தின்
தொடக்கமான சாம்பல் புதனை திருச்சபை இன்று சிறப்பிக்கின்றது. இந்த நாற்பது நாட்களும் பாவத்திற்காக மனம் வருந்தல், மனமாற்றம் மற்றும் புதுப்பித் தலின் திருப்பயணமாகச் செலவிடப்பட வேண்டும் என கிறிஸ்தவ சமுதாயம் முழுமையும் அழைப்புப் பெறுகிறது. விவிலியத்தில் நாற்பது என்ற எண், பல்வேறு சிறப்பு அடையாளங்களைக் கொண்டுள்ள ஒன்றாகும். இஸ்ரயேலரின் பாலைவனப் பயணத்தை இது நினைவுபடுத்தி நிற்கின்றது. அப்பாலைவனப் பயணக்காலம், எதிர்பார்ப்பின், சுத்திகரிப்பின் மற்றும் இறைவனுடன் நெருக்கமாக இருந்த கால மாக மட்டுமல்ல, சோதனையின் மற்றும் துன்பங்களின் காலமாகவும் இருந்தது.
   தன் பொதுவாழ்வைத் தொடங்குவதற்கு முன்னால் இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்களைச் செலவிட்டத்தையும் இத்தவக்காலம் நினைவுறுத்தி நிற்கின் றது. அந்த நாற்பது நாட்களும் இயேசு செபத்தில் தந்தையுடன் ஆழமான நெருக் கத்தில் இருந்தார். அது மட்டுமல்ல, தீமை எனும் மறைபொருளையும் அவர் எதிர்கொண்டார். திருச்சபையின் தவக்காலத் தன்னொறுப்பு என்பது இயேசுவின் பாஸ்கா மறையுண்மையில் அவரைப் பின்பற்றுவதற்கும், நம் விசுவாச வாழ்வை ஆழப்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாக கொண்டதாகும். இந்த நாற்பது நாட்களும் நாம், நமதாண்டவரின் வார்த்தைகளையும் எடுத்துக்காட்டுக்களையும் ஆழமாகத் தியானிப்பதன் மூலம் அவரிடம் மிக நெருக்கமாக வந்து, நம் ஆன்மீக வறட்சி, சுயநலம் மற்றும் உலகாயுதப் போக்குகளை வெற்றி கொள்வோமாக. சிலுவையில் அறையுண்டு மரித்து, பின்னர் உயிர்த்தெழுந்த நமதாண்டவருடன் கொள்ளும் ஒன்றிப்பில், பாலைவன அனுபவத்தின் வழியாக உயிர்ப்பின் மகிழ்வு மற்றும் நம்பிக்கையை நோக்கி இறைவன் நம்மை வழிநடத்திச் செல்லும் இந்த தவக்காலம், அருளின் காலமாக அகில உலகத் திருச்சபைக்கும் அமைவதாக.
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, February 20, 2012

பிப்ரவரி 19, 2012

மக்களை இயேசுவிடம் கொணரும் நோக்கத்திற்காகவே கத்தோலிக்க திருச்சபை இருக்கிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத் தில் இஞ்ஞாயிறு காலை 22 புதிய கர்தினால் களுடன் இணைந்து, தூய பேதுருவின் தலைமைப் பீடம் விழாவை சிறப்பிக்கும் திருப்பலியை திருத் தந்தை 16ம் பெனடிக்ட் நிறைவேற்றினார். வழக்க மாக பிப்ரவரி 22ந்தேதி சிறப்பிக்கப்படும் இவ்விழா, இவ்வாண்டு சாம்பல் புதனன்று வருவதால் இந்த ஞாயிறு கொண்டாடப்பட்டது. அந்த திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரையில் பின்வரும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
   தூய பேதுருவின் தலைமைப்பீடத்தை உண்மையின் அரியணை என்று நாம் கூறலாம்; இது பிலிப்புச் செசரியா பகுதியில் பேதுருவின் மறுமொழிக்கு பின் கிறிஸ்துவால் வழங்கப்பட்டது (மத்தேயு 16:18). இந்த நீதிபதி இருக்கைப் பீடம் இறுதி இரவுணவு வேளையில் பேதுருவிடம் கூறிய வார்த்தைகளையும் நமக்கு நினை வூட்டுகிறது: "நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பிய பின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" (லூக்கா 22:32).
   கிறிஸ்துவின் மந்தையை விசுவாசத்திலும் பிறரன்பிலும் ஒன்றிணைப்பதற்கான பேதுரு மற்றும் அவரின் வழிவருபவருடைய சிறப்புப்பணியின் அடையாளமாகவும் தூய பேதுருவின் தலைமைப்பீடம் உள்ளது. பாறை என்ற பெயர் பேதுருவின் தனிப் பண்பை அல்ல, மாறாக இயேசுவால் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட மறைபொருள் அலுவலைச் சார்ந்தது. தனக்காக அல்ல, மாறாக, மக்களை இயேசுவிடம் கொண்டு ரும் நோக்கத்திற்காகவே கத்தோலிக்கத் திருச்சபை இருந்து வருகிறது. யாரிட மிருந்து வந்ததோ, யாரால் வழிநடத்தப்படுகிறதோ அவரைத் தன் வழியாக ஒளிரச் செய்வதற்காகவே திருச்சபை இவ்வுலகில் செயல்படுகின்றது.
   (17ம் நூற்றாண்டைச் சார்ந்த பெர்னினி உருவாக் கிய தூய பேதுருவின் தலைமையைக் குறிக்கும்) பேதுருவின் இருக்கை திருச்சபைத் தந்தையரால் தாங்கப்படும் சிற்பம், திருச்சபையின் பாரம்பரியத் தையும், ஒரே திருச்சபை பற்றிய உண்மை விசு வாசத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த பீடத்தில் அன்பு விசுவாசத்தின் மேல் அமர்ந்திருக் கிறது. மனிதர் கடவுள் மீதான நம்பிக்கையினை விடுத்து, அவருக்கு கீழ்ப்படிய மறுத்தால் அன்பு சிதைந்துவிடும். திருவருட்சாதனங்கள், திருவழி பாடு, நற்செய்தி அறிவிப்பு, பிறரன்பு என திருச் சபையில் உள்ள ஒவ்வொன்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. விசுவாசம் அன்பைச் சார்ந்ததாக உள்ளது. கிறிஸ் தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் அன்பு என்ற இந்த கொடை தரப்பட்டுள்ளது. நமது சாட்சிய வாழ்வால் இக்கொடை மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
   இவ்வாறு மறையுரை ஆற்றிய திருத்தந்தை, திருப்பலியின் இறுதியில் மக்க ளோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்து அவர்களுக்கு வழங்கிய உரை யில், புதிய கர்தினால்களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.

Saturday, February 18, 2012

பிப்ரவரி 18, 2012

புதிய கர்தினால்கள், அன்பு, ஆர்வம், ஞானம் மற்றும்
மறைசாட்சிகளுக்குரிய துணிவுடனும் திருச்சபைக்கு
பணிபுரிய வேண்டும் - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத் தில் 22 புதிய கர்தினால்களுக்கு சிவப்புத் தொப்பி யும், மோதிரமும் வழங்கி, அவர்களுக்குரிய ஆல யத்தையும் குறித்த திருவழிபாட்டை இச்சனிக் கிழமை நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அத்திருவழிபாட்டில் புதிய கர்தினால்களுக்கு பின் வருமாறு பேருரை ஆற்றினார்.
   “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்” (மத்தேயு 16:18) என்று இயேசு புனித பேதுருவிடம் சொன்ன திருச்சொற்களுடன் இப்பேருரையைத் தொடங்கிய திருத்தந்தை, இச்சொற்கள் இன்றைய திருச்சபை நிகழ்ச்சியின் பண்பை விளக்குகின்றன என்று கூறினார்.
   ஒன்றிப்பின் காணக்கூடிய அடித்தளமாகிய பேதுருவில் வெளிப்படும் திருச்சபை யின் சிறந்த பணியாளர்களாக இருக்குமாறு புதிய கர்தினால்களைக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, கிறிஸ்து சிலுவையில் தம்மையே முழுவதும் கொடையாக அளித்தது, புதிய கர்தினால்களின் வாழ்வுக்கு அடித்தளமாகவும், பிறரன்பில் விசுவா சத்துடன் செயல்படக்கூடிய தூண்டுதலையும் வலிமையையும் கொடுப்பதாகவும் இருக்கட்டும் எனவும் கூறினார்.
   அடக்கி ஆள்தலும் சேவையும், தன்னலக்கோட்பாடும் பிறர்க்கென வாழும் தகைமையும், பொருள்களைக் கொண்டிருத்தலும் கொடையும், சுயநலமும் கைம் மாறு கருதாத தன்மையும், ஆகிய இவை ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் ஒன்றுக்கொன்று, மிகவும் முரணாக அமைகின்றன. ஆயினும், இயேசு காட்டிய வழி, பிறருக்குத் தொண்டு செய்யவும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமானது (மாற்கு 10:45) என்றுரைத்த திருத்தந்தை, புதிய கர்தினால் களும் இயேசுவின் இவ்வழியில் நடக்கத் தூண்டப்படுகிறார்கள் என்று கூறினார்.
    அன்புடனும் ஆர்வத்துடனும், வெளிப்படையாகவும் ஆசிரியர்களின் ஞானத்துட னும், மேய்ப்பர்களின் சக்தி மற்றும் பலத்துடனும், மறைசாட்சிகளுக்குரிய பற்றுறுதி மற்றும் துணிவுடனும் திருச்சபைக்கு பணிபுரியுமாறு புதிய கர்தினால்ளை கேட்டுக் கொண்ட திருத்தந்தை, எவ்வளவுக்குப் பணியாளராய் இருக்க முடியுமோ அந்த அளவுக்கே அதிகாரமும் மகிமையும் வந்தடைகின்றது என்றும், மனித குலத்திற்கு முழுவதும் விசுவாசமாய் இருப்பதிலும், மனித குலத்தின்மீது முழுவதும் பொறுப்பு டன் நடந்து கொள்வதிலும் இயேசுவின் சேவை உண்மைவடிவம் பெற்றது என்றும் தெரிவித்தார்.
   பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்ட இவ் வழிபாட்டில், புதிய கர்தினால்களுக்குரிய சிவப்புத் தொப்பி, மோதிரம், அவர்களுக் குரிய ஆலயம் ஆகியவற்றின் அர்த்தங்களையும் விளக்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்துவின் நற்செய்தியினால் எப்பொழுதும் வழிநடத்தப்பட்டவர்க ளாய், எல்லாக் காலத்திலும் கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கம் உள்ளவர்களாக வாழக் கர்தினால்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்காக விசுவாசிகள் அனைவரும் செபிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Wednesday, February 15, 2012

பிப்ரவரி 15, 2012

இயேசுவின் செபம் மனித குலத்தின் மீதான அவரது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துகிறது - திருத்தந்தை
 
   கடுமையான குளிரை இன்னும் அனுபவித்து வரும் உரோம் நகரில் இப்புதனன்று திருத்தந்தை யின் பொது மறைபோதகத்திற்கு செவிமடுக்க, திருப்பயணிகளின் கூட்டம் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தை நிறைத்திருந்தது. கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையின் தொடர்ச்சியாக, சிலுவையில் தொங்கியபோது இயேசு செபித்த செபம் குறித்து மீண்டுமொரு முறை இன்று, நோக்குவோம் என தனது மறை போதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   சிலுவையில் அறையுண்ட நமதாண்டவரின் கடைசி மூன்று வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார் புனித லூக்கா. "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என தன்னைத் துன்புறுத்துபவர்களுக்காக தன் செபத்தில் வேண்டுவதன் வழி, பாவம் நிறைந்த மனித குலத்துடன் ஒப்புரவாகும் தன் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார் இயேசு. நல்ல கள்ளனை நோக்கி, "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என் உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" எனக் கூறியதன் வழி, மனம் திருந்தி இறைவன்மீது முழு விசுவாசம் கொள்ளும் அனைவருக்குமான உறுதியான நம்பிக் கையைத் தருகிறார் இயேசு.
   "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என உரத்த குரலில் இயேசு அறிக்கையிட்டது, இறைவிருப்பத்திற்கு முழு நம்பிக்கையுடன் தன்னையே அவர் கையளித்ததை வெளிப்படுத்தி நிற்கிறது. தந்தையுடன் இயேசு கொண்டிருந்த சிறப்பு உறவில் பிறந்த இந்த முழுமையாய் கையளிக்கும் மனநிலையே அவரின் செப வாழ்வை வடிவமைத்தது. வானுலகில் நம்மை அரவணைக்க உள்ள இறைவ னின் கரங்கள் நம் இவ்வுலக வாழ்விலும் நம் துன்பங்களைத் தாங்கும் பலத்தைத் தந்து காக்கின்றன என்ற முழு நம்பிக்கையுடன் அக்கரங்களில் நம்மை முழுமை யாக ஒப்படைப்பதுடன், நம் எதிரிகளை மன்னித்து, அன்பு கூர்ந்து அவர்களின் மனமாற்றத்திற்காக செபிக்க வேண்டும் என இயேசு சிலுவையிலிருந்து நமக்குக் கற்றுத்தருகிறார்.
   இவ்வாறு கிறிஸ்தவ செபம் குறித்த தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, February 13, 2012

பிப்ரவரி 12, 2012

நமது ஆழ்ந்த குணம்பெறலும், புது வாழ்வுக்கான நமது உயிர்ப்புமே கிறிஸ்துவின் வெற்றி! - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு காலை தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஞாயிறு நற்செய்தியில் இடம் பெற் றுள்ள குணமளித்தலை மையப்படுத்தி பேசினார்.
   ஒரு தொழுநோயாளி குணமான பின்னரும்கூட, அவர் சமுதாயத்தோடு எப்போது மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யூதக் குருக்களின் வேலையாக இருந்தச் சூழலில், ஒரு தொழுநோயாளி இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று வேண்டியதை திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.
   அக்காலத்தில் மனிதரைத் தூய்மையற்றவர் என்று சொல்லி சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு காரணமாக இந்நோய் இருந்தபோதும், தொழுநோயாளியைத் தொடுவது யூதச் சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், இயேசு அந்நோயாளி யைத் தொடுவதைத் தவிர்க்கவில்லை; "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று கூறி அவரைத் தொட்டு குணமாக்கினார் என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.
   தொழுநோயாளியை இயேசு தொட்டது, இறைவனுக்கும் மனிதக் கறைகளுக்கும் இடையேயும், தூய்மைக்கும் தூய்மையற்றத்தன்மைக்கும் இடையேயும் இருக்கும் ஒவ்வொரு தடையையும் தகர்த்தெறிகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இயேசு வின் இச்செயலானது, தீமை மற்றும் அதன் எதிர்மறை சக்தியைப் புறக்கணிக்க வில்லை, ஆனால் மிகக் கொடுமையான, தொற்றிக்கொள்ளும் தன்மையுடைய நிலையிலும்கூட, தீமையைவிட இறைவனின் அன்பு உறுதியானது என்பதை அவ ருடைய செயல் காட்டுகின்றது என திருத்தந்தை விளக்கினார்.
   "கிறிஸ்துவின் அந்த செய்கையிலும், அந்த வார்த்தைகளிலும் மீட்பின் முழு வரலாறும் காணப்படுகிறது; அதாவது நம்மை சிதைத்து, நம் உறவுகளை அழிக்கும் அனைத்து தீமைகளிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்தி, குணமாக்கும் கடவுளின் திருவுளம் உள்ளடங்கி இருக்கிறது" என்று திருத்தந்தை கூறினார்.
   தொழுநோயாரில் கிறிஸ்துவைக் கண்ட புனித பிரான்சிசின் வாழ்க்கையை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, "தொடக்க பிரிவில் இருந்து மீண்டபோது, பிரான்சிஸ் தொழுநோயாரை அணைத்துக் கொண்ட போதிலும், இயேசு அவரது தொழுநோயை அதாவது தற்பெருமையை குணப்படுத்தி, அவரை கடவுளின் அன்பு கருவியாக மாற்றினார். அவ்வாறே நமது ஆழ்ந்த கும்பெறலும், புது வாழ்வுக்கான நமது உயிர்ப்புமே கிறிஸ்துவின் வெற்றி!" என்று எடுத்துரைத்தார்.
   முன் தினம், நினைவுகூரப்பட்ட லூர்து நகரில் காட்சியளித்த கன்னி மரியாவிடம் செபித்து தனது கருத்துக்களை நிறைவு செய்த திருத்தந்தை, "நம் அன்னை திருக் காட்சியாரான புனித பெர்னதெத்துக்கு வழங்கிய எக்காலத்துக்கும் ஏற்ற செய்தி, செபம் மற்றும் தபத்திற்கான அழைப்பு" என்றார்.
   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது உரையின் இறுதியில், சிரியாவில் நடைபெறும் வன்முறைகளும் இரத்தம் சிந்துதலும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று அவசர அழைப்புவிடுத்தார். மோதலில் பாதிக்கப்பட்டோரை செபத்தில் நினைவு கூருமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அவர், உரையாடல், ஒப்புரவு மற்றும் அமைதிக்கான அர்ப்பணத்தின் பாதையைத் தேர்ந்து கொள்ளுமாறும், சிரியா மக்க ளின் நியாயமான கோரிக்கைகளுக்கும், சர்வதேச சமுதாயத்தின் வேண்டுகோளுக் கும் செவிமடுக்குமாறும் சிரியா அரசு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Wednesday, February 8, 2012

பிப்ரவரி 8, 2012

சிலுவையில் தொங்கிய இயேசுவின் அறைகூவல்
நம்பிக்கை இழப்பின் வெளிப்பாடல்ல - திருத்தந்தை

   பலத்த பனிப்பொழிவுக்கு பின் மக்களின் இயல்பு வாழ்வு ஓரளவு திரும்பியுள்ள நிலையில், திருத் தந்தையின் புதன் பொதுமறைபோதகத்தில் பங்கு கொள்ள வந்திருந்த திருப்பயணிகளின் கூட்டமும் வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்ட பத்தை நிறைத்திருந்தது. "என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்" என இயேசு சிலுவையில் தொங்கியபோது விடுத்த அறை கூவல் குறித்து இன்று தியானிப்போம் என இவ் வார புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
    நண்பகலில் நாடெங்கும் இருள் உண்டாகி அது மூன்று மணி நேரம் நீடித்த பின் இவ்வார்த்தைகளை உச்சரிக்கிறார் இயேசு. இருள் என்பது விவிலியத்தில் இருவேறு அடையாளங்களாக காட்டப்பட்டுள்ளது. தீயோனின் சக்தியின் அடையாளமாக பல வேளைகளில் காட்டப்பட்டுள்ள இருள், இறைவனின் மறைபொருளான பிரசன் னத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக, மலை மீது மோசேக்கு இறைவன் தோன்றியபோது மோசே இருண்ட மேகத்தால் சூழப்பட்ட தையும், கல்வாரியில் இயேசு இருளால் சூழப்பட்டதையும் குறிப்பிடலாம். தந்தை இறைவனின் இருப்பு அங்கு இல்லை என்பது போல் தோன்றினாலும், சிலுவையில் அன்பு காணிக்கையான மகனின் மீது அவரின் அன்புப் பார்வை மறைவடக்கமான வழியில் இருந்தது.
   சிலுவையில் தொங்கிய வேளையில் இயேசுவின் இந்த அறைகூவல் நம்பிக்கை இழப்பின் வெளிப்பாடல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். திருப்பாடல் 22ன் துவக்க வார்த்தைகளான இவை, அந்த திருப்பாடலின் முழுக் கருப் பொருளையும் வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. அதாவது, எத்தனை துன்பங்கள் மத்தியிலும் இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் இறை நம்பிக்கையையும், அவர்க ளிடையே காணப்படும் இறைப் பிரசன்னத்தையும், அவர்களின் கூக்குரலுக்கு அவர் செவிமடுத்து பதிலளிப்பதையும் இத்திருப்பாடல் உணர்த்துகிறது. இறக்கும் தறுவா யில் இயேசு செபித்த இந்த செபம், நாமும் துன்புறும் நம் சகோதர சகோதரிகளுக்காக நம்பிக்கையுடன் செபிக்க வேண்டும் எனக் கற்றுத் தருகிறது. இந்தச் செபத்தின் வழி நம் சகோதர சகோதரிகளும், தங்களை எப்போதும் கைவிடாத இறைவனின் அன்பு குறித்து அறிந்துகொள்வார்களாக.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, கடந்த வாரத்தில் ஐரோப்பாவில் இடம்பெற்ற பெரும் பனிப்பொழிவால் விளைந்த பெரும் இடர்பாடுகளையும் பொருட்சேதங்களையும் குறிப்பிட்டு, இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தன் அருகாமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்தக் கடும் குளிரினால் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் செபிக்கு மாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்த திருத்தந்தை, இந்தத் துன்ப காலத்தில், துயருறும் மக்களுக்கு மற்றவர்களின் ஒருமைப்பாட்டுணர்வு, தாராள மனப்பான்மை போன்றவைகளின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். இறுதியில் அனைவருக் கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.

Sunday, February 5, 2012

பிப்ரவரி 5, 2012

நோயின்போது உரிய கவனத்தோடு செயல்படுவதுடன்  விசுவாசத்தோடும் இருக்க வேண்டும் - திருத்தந்தை

   வத்திகானில் நிலவிய கடும் குளிரின் நடுவிலும் இஞ்ஞாயிறு தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த சுமார் பத்தாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்றைய நற்செய்தி வாசகத்தை அடிப் படையாக கொண்டு பின்வருமாறு கூறினார்:
   "இன்றைய ஞாயிறு நற்செய்தியில், ஒரு வகை யான அல்லது மற்றொரு விதமான பிணிகளால் வருந்திய பலரை இயேசு குணப்படுத்தியதை நாம் அறிகிறோம். நற்சுகம் தேவைப்படும் நமக்கு தெரிந்த அனைவருக்காகவும் நாம் அவரிடம் பரிந்துரைப்போம் மேலும் நமது சொந்த இதயத்தின் கடினத்தன்மையை அகற்றிவிடுமாறும் அவரிடம் கேட்போம், அதன் மூலம் அவரது அன்புக்கு இன்னும் பரந்த மனப்பான்மையுடன் நாம் பதிலளிக்க முடியும்."
   தொடர்ந்து நோயைப் பற்றி விவரித்த திருத்தந்தை, அது உலகிலும் மனிதரிலும் இருக்கும் தீமையின் ஓர் அடையாளம் என்றும், குணமாக்குதல் இறையரசு அருகில் இருப்பதை காட்டுகிறது எனவும் குறிப்பிட்டார். நோயில் மற்றவர்களின் கவனிப்பை நாம் பெற முடிகிறது, அதே வேளையில் மற்றவர்களை கவனிக்கும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது என்றும் அவர் கூறினார்.
   வேதனையுறுவோரின் நிலையில் இருந்து பார்த்தால், நோய் என்பது நீண்ட கடினமான ஒரு நிலையாக மாறலாம், மேலும் அது குணமாகாமல் துன்பம் நீடிக்கும் வேளையில் நாம் தொடர்ந்து தனிமையில் இருப்பதுடன் சோர்ந்தும் போகிறோம் என்று கூறிய திருத்தந்தை, கடும் துன்பங்களை எதிர்கொள்கின்றவர்களுக்கு இறை வன் ஆழ்ந்த அக அமைதியைக் கொடுப்பதால் அவர்கள் இத்துன்பங்களைத் தாங்கிக் கொள்கின்றார்கள் என்று நமக்குத் தெரியும் என்றும், நோயின்போது நாம் உரிய கவனத்தோடு செயல்படுவதுடன், விசுவாசத்துடனும் இருக்க வேண்டும் என்றும் எடுத்து சொன்னார்.
   மரணத்தை எதிர்நோக்கும்போதுகூட, மனிதரால் இயலாதவற்றை விசுவாசம் இயலக்கூடியதாக ஆக்கும் என்பதற்கு (இத்தாலியின் சவோனா நகரில், எலும்பு புற்றுநோயால் தாக்கப்பட்டு உயிரிழந்த 18 வயது இளம்பெண்) அருளாளர் கியாரா பதானோவின் வாழ்க்கை சான்றாக உள்ளது எனவும், நோயில் நம் அனைவருக்கும் மனித அரவணைப்பு தேவை என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, இன்றைய நாளில் (பிப்ரவரி 5) இத்தாலி நாட்டில் சிறப்பிக்கப்படும் வாழ்வுக்கான தினத்தைப் பற்றியும் சுட்டிக் காட்டினார்.
   இயேசு கிறிஸ்துவின் அன்பில் நம்பிக்கை வைப்பதன் மூலம், நீண்ட கால நோயின் வேதனைகளைத் தாங்கிக் கொள்ள இயலும் என்றும், இயேசு தந்தையிடம் இருந்து வந்த அன்பின் வல்லமையால் பிசாசை எதிர்கொண்டார், எனவே நாம் கடவுளின் அன்பில் ஆழ்ந்திருந்தால் நோயை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுவர முடியும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
   வருகிற சனிக்கிழமை பிப்ரவரி 11ம் தேதி, லூர்து அன்னை திருவிழா அன்று, உலக நோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இயேசு பிணியாளரைக் குண மாக்குகிறார், அவரால் குணமாக்க முடியும் என்பதில் இந்நாளில் அனைவரும் நம் பிக்கை வைப்போம், மனிதத் துன்பம் எப்பொழுதும் அன்பால் சூழப்பட்டதாக இருக் கட்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Friday, February 3, 2012

பிப்ரவரி 2, 2012

கடவுளோடு கொண்டிருக்கும் உறுதியான உறவே துறவு வாழ்வின் தன்மையை விளக்குகின்றது - திருத்தந்தை

   அர்ப்பண வாழ்வை சிறப்பிக்கும் அனைத்துலக துறவியர் தினமான இவ்வியாழன் மாலை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆயிரக்கணக்கான இருபால் துறவி யருடன் சேர்ந்து திருப்புகழ்மாலை செபித்து மறையுரையாற் றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பிப்ரவரி 2ம் தேதியன்று இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வு திருச்சபையால் சிறப்பிக்கப்படுகின்றது. அருளாளரான திருத் தந்தை 2ம் ஜான் பால், 1997ம் ஆண்டில் முதன் முறையாக இந்நாளை அனைத்துலக துறவியர் தினமாக அறிவித்து, இத் தினத்தைச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
   மறையுரையில்  இயேசுவின் ஆலய அர்ப்பணத்தைப் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை, "வரலாற்று காலத்தைப் பின்பற்றி சிறப்பிக்கப்படும் இவ்விழா, கிறிஸ்து பிறப்பில் இருந்து சரியாக நாற்பதாம் நாளில் கொண்டாடப் படுகிறது. திருக்காட்சி விழாவில் நிறைவு பெறும் கிறிஸ்துமஸ் கால விழாக்களின் பண்பான கிறிஸ்துவே உலகின் ஒளி என்ற மையக்கருத்து இன்றைய கொண்டாட் டத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.
   இறைவனோடு தனக்குள்ள உறவை உறுதிப்படுத்துவது, ஒருவரது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெற வேண்டும் என்றும், இது துறவற வாழ்க்கையின் தன்மையை அதிக ஆழமாக விளக்குவதாகவும் இருக்கின்றது எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து இருபால் துறவியரின் விசுவாசத் தின் சான்றுக்கு இந்நாள் அதிக கவனம் செலுத்துகின்றது என்றும், துறவிகள் தங்களையே இறைவனுக்குக் கையளிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் எண்ணங் களையும் உணர்வுகளையும் மீண்டும் தூண்டுவதாக இத்தினம் அமைகின்றது என வும் எடுத்து கூறினார்.
   ஏழ்மை, கற்பு, பணிவு ஆகிய நற்செய்தி அறிவுரைகள், நம்பிக்கை, பற்றுறுதி, பிறரன்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, மக்களை இறைவனிடம் நெருக்கமாகக் கொண்டு வருகின்றன என்று கூறிய அவர், துறவிகள் தங்களது சபைகளின் தனி வரம் மூலம், திருச்சபைக்கும் இன்றைய உலகுக்கும் நம்பத்தகுந்த சாட்சிகளாகத் திகழவும், திருச்சபையின் போதனைகளுக்கு விசுவாசமாக இருக்கவும், விசுவாசத் துக்கு எடுத்துக்காட்டுகளாக செயல்படவும் அவர்களை வலியுறுத்தினார். 
   வருகிற அக்டோபரில் தொடங்கும் விசுவாச ஆண்டு, அனைத்து விசுவாசிகளுக் கும், சிறப்பாக துறவியர் அனைருக்கும், அகப் புதுப்பித்தலுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது என்றும், துறவிகள் சாட்சிய வாழ்வு வாழ்வதற்கும், நற்செய்தி அறி விப்பதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.