Wednesday, February 22, 2012

பிப்ரவரி 22, 2012

இத்தவக்காலம் அகில உலக திருச்சபைக்கும்
அருளின் காலமாக அமையட்டும்  - திருத்தந்தை

   வாராந்திர பொது மறைபோதகத்துக்காக தவக் காலத்தின் முதல் நாளான இப்புதனன்று, திருப் பயணிகளை வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்த திருத்தந்தை தவக் காலத் தயாரிப்புகள் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.
   கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய தவக்காலப் பயணத்தின்
தொடக்கமான சாம்பல் புதனை திருச்சபை இன்று சிறப்பிக்கின்றது. இந்த நாற்பது நாட்களும் பாவத்திற்காக மனம் வருந்தல், மனமாற்றம் மற்றும் புதுப்பித் தலின் திருப்பயணமாகச் செலவிடப்பட வேண்டும் என கிறிஸ்தவ சமுதாயம் முழுமையும் அழைப்புப் பெறுகிறது. விவிலியத்தில் நாற்பது என்ற எண், பல்வேறு சிறப்பு அடையாளங்களைக் கொண்டுள்ள ஒன்றாகும். இஸ்ரயேலரின் பாலைவனப் பயணத்தை இது நினைவுபடுத்தி நிற்கின்றது. அப்பாலைவனப் பயணக்காலம், எதிர்பார்ப்பின், சுத்திகரிப்பின் மற்றும் இறைவனுடன் நெருக்கமாக இருந்த கால மாக மட்டுமல்ல, சோதனையின் மற்றும் துன்பங்களின் காலமாகவும் இருந்தது.
   தன் பொதுவாழ்வைத் தொடங்குவதற்கு முன்னால் இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்களைச் செலவிட்டத்தையும் இத்தவக்காலம் நினைவுறுத்தி நிற்கின் றது. அந்த நாற்பது நாட்களும் இயேசு செபத்தில் தந்தையுடன் ஆழமான நெருக் கத்தில் இருந்தார். அது மட்டுமல்ல, தீமை எனும் மறைபொருளையும் அவர் எதிர்கொண்டார். திருச்சபையின் தவக்காலத் தன்னொறுப்பு என்பது இயேசுவின் பாஸ்கா மறையுண்மையில் அவரைப் பின்பற்றுவதற்கும், நம் விசுவாச வாழ்வை ஆழப்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாக கொண்டதாகும். இந்த நாற்பது நாட்களும் நாம், நமதாண்டவரின் வார்த்தைகளையும் எடுத்துக்காட்டுக்களையும் ஆழமாகத் தியானிப்பதன் மூலம் அவரிடம் மிக நெருக்கமாக வந்து, நம் ஆன்மீக வறட்சி, சுயநலம் மற்றும் உலகாயுதப் போக்குகளை வெற்றி கொள்வோமாக. சிலுவையில் அறையுண்டு மரித்து, பின்னர் உயிர்த்தெழுந்த நமதாண்டவருடன் கொள்ளும் ஒன்றிப்பில், பாலைவன அனுபவத்தின் வழியாக உயிர்ப்பின் மகிழ்வு மற்றும் நம்பிக்கையை நோக்கி இறைவன் நம்மை வழிநடத்திச் செல்லும் இந்த தவக்காலம், அருளின் காலமாக அகில உலகத் திருச்சபைக்கும் அமைவதாக.
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.