Wednesday, February 15, 2012

பிப்ரவரி 15, 2012

இயேசுவின் செபம் மனித குலத்தின் மீதான அவரது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துகிறது - திருத்தந்தை
 
   கடுமையான குளிரை இன்னும் அனுபவித்து வரும் உரோம் நகரில் இப்புதனன்று திருத்தந்தை யின் பொது மறைபோதகத்திற்கு செவிமடுக்க, திருப்பயணிகளின் கூட்டம் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தை நிறைத்திருந்தது. கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையின் தொடர்ச்சியாக, சிலுவையில் தொங்கியபோது இயேசு செபித்த செபம் குறித்து மீண்டுமொரு முறை இன்று, நோக்குவோம் என தனது மறை போதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   சிலுவையில் அறையுண்ட நமதாண்டவரின் கடைசி மூன்று வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார் புனித லூக்கா. "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என தன்னைத் துன்புறுத்துபவர்களுக்காக தன் செபத்தில் வேண்டுவதன் வழி, பாவம் நிறைந்த மனித குலத்துடன் ஒப்புரவாகும் தன் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார் இயேசு. நல்ல கள்ளனை நோக்கி, "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என் உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" எனக் கூறியதன் வழி, மனம் திருந்தி இறைவன்மீது முழு விசுவாசம் கொள்ளும் அனைவருக்குமான உறுதியான நம்பிக் கையைத் தருகிறார் இயேசு.
   "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என உரத்த குரலில் இயேசு அறிக்கையிட்டது, இறைவிருப்பத்திற்கு முழு நம்பிக்கையுடன் தன்னையே அவர் கையளித்ததை வெளிப்படுத்தி நிற்கிறது. தந்தையுடன் இயேசு கொண்டிருந்த சிறப்பு உறவில் பிறந்த இந்த முழுமையாய் கையளிக்கும் மனநிலையே அவரின் செப வாழ்வை வடிவமைத்தது. வானுலகில் நம்மை அரவணைக்க உள்ள இறைவ னின் கரங்கள் நம் இவ்வுலக வாழ்விலும் நம் துன்பங்களைத் தாங்கும் பலத்தைத் தந்து காக்கின்றன என்ற முழு நம்பிக்கையுடன் அக்கரங்களில் நம்மை முழுமை யாக ஒப்படைப்பதுடன், நம் எதிரிகளை மன்னித்து, அன்பு கூர்ந்து அவர்களின் மனமாற்றத்திற்காக செபிக்க வேண்டும் என இயேசு சிலுவையிலிருந்து நமக்குக் கற்றுத்தருகிறார்.
   இவ்வாறு கிறிஸ்தவ செபம் குறித்த தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.